கொடுங்கையூர் காலனியில் ஆபத்தான நிலையில் நீர்த்தேக்க தொட்டி; அகற்ற கோரிக்கை

பெரம்பூர்: சென்னையில் குடிநீர் இணைப்பு கொடுக்கப்படாத இடங்களில், குடியிருப்புகளுக்கு நடுவே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், குடிநீர் வாரியம் சார்பில் கட்டப்பட்டது. நாளடைவில், பெரும்பான இடங்களில் குடிநீர் இணைப்பு ஏற்படுத்தப்பட்ட பின்பு இந்த நீர்த்தேக்க தொட்டிகள் பயனற்று போனது.

 பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி உள்ள இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் தற்போது சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன. அதன்படி, கொடுங்கையூர் 35வது வார்டுக்கு உட்பட்ட கொடுங்கையூர் காலனி அம்பேத்கர் தெருவில் பல ஆண்டுகளாக பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளது.

இதனால், அந்த பகுதி மக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன், இந்த நீர்த்தேக்க தொட்டியை குடிநீர் வாரிய அதிகாரிகள் இடித்து அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அதன்பேரில், பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர் நேற்று அந்த நீர்த்தேக்க தொட்டியை நேரில் ஆய்வு செய்து, விபத்து ஏற்படுவதற்கு முன்பு அகற்றும்படி குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரிய அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

இதேபோல், எம்கேபி நகர் திருவள்ளுவர் நகர் முதல் தெருவில், குடிநீர் வாரிய அலுவலகத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், இதனையும் குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: