சென்னை: தொடர் மழை காரணமாக பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து 10,000 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தில் மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் நேற்றைய நிலவரப்படி 2960 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் மற்றும் மழை காரணமாக வரத்து கால்வாய்கள் மூலமாக பெறப்படும் நீர் என 8280 கன அடி நீரும் வந்து கொண்டிருக்கிறது. எனவே, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில், 2 நாட்களுக்கு முன்பு, 100 கன அடி வீதம் உபரிநீர் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் 1,500 கன அடியாக உயர்த்தித் திறக்கப்பட்டது. பின்னர், இரவு 9.30 மணியளவில் 5 ஆயிரம் கன அடியாக உபரிநீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று காலை நீர் வரத்து மேலும் அதிகமானதால் 10 ஆயிரம் கன அடியாக உபரிநீர் திறக்க உத்தரவிட்டதின் பேரில் நீர்வளத்துறை செயற்பொறியாளர் பொதுப்பணித் திலகம், உதவி செயற்பொறியாளர் எம்.பி.சத்திய நாராயணா, உதவி பொறியாளர் ரமேஷ் ஆகியோர் 7 மதகுகள் வழியாக 10 ஆயிரம் கன அடி உபரி நீரை திறந்து விட்டனர். இந்த உபரி நீர் கொசஸ்தலை ஆறு வழியாக செல்வதால், கரையோர கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எறையூர், பீமன்தோப்பு, கொரக்கத்தண்டலம், ஆத்தூர், பண்டிக்காவனூர், மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், எண்ணூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் மாலை 4 மணிக்கு 7000 கன அடியாக குறைக்கப்பட்டது. புழல் ஏரியில் மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கன அடியில் நேற்றைய நிலவரப்படி 2579 மில்லியன் கன அடி நீர் உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து 623 கன அடியாக உள்ளது.
மேலும் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 187 கன அடி நீரும். அணையின் பாதுகாப்பு கருதி புழல் நீர் தேக்கத்தில் இருந்து 100 கன அடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சோழவரம் ஏரியில் நேற்றைய நிலவரப்படி மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கன அடியில் 610 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து 657 கன அடி உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் நேற்றைய நிலவரப்படி மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் 3028 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு மழை நீர் மற்றும் வரத்துக் கால்வாய்கள் மூலம் பெறப்படும் நீர் என 2134 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 131 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் பாதுகாப்பு கருதி செம்பரம்பாக்கத்தில் இருந்து 100 கன அடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதேபோல் கண்ணன்கோட்டையில் நேற்றைய நிலவரப்படி மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில் 500 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.