உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் பாரதி சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்தார்: புதுப்பிக்கப்பட்ட நினைவு இல்லமும் காணொலி வாயிலாக திறப்பு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை தலைமைச்  செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக தமிழக அரசின் சார்பில்  உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லத்தை  புனரமைப்பு செய்து, நினைவு இல்லத்தினையும் அதில் அமைக்கப்பட்டுள்ள அவரது  மார்பளவுச் சிலையினையும் திறந்து வைத்து, பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்பு  மலரையும் வெளியிட்டார்.

மகாகவி பாரதியாரின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலின், பாரதியார் மறைந்த நூற்றாண்டின் நினைவாக 10.9.2021  அன்று பாரதியின் நினைவு நாள் “மகாகவி நாள் ”-ஆக கடைப்பிடிக்கப்படும்,  “பாரதி இளங்கவிஞர் விருது” வழங்கப்படும், வாரணாசியில் அவர் வாழ்ந்த வீடு  புனரமைக்கப்பட்டு நினைவு இல்லமாக மாற்றப்படும் உள்ளிட்ட 14 முக்கிய  அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன் அடிப்படையில், உத்தரபிரதேசம் மாநிலம்,  வாரணாசியில் மகாகவி பாரதியார் வாழ்ந்த வீட்டினை நினைவில்லமாக  மாற்றுவதற்கு, வீட்டின் உரிமையாளருடன் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு வீட்டின்  ஒரு பகுதி 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு, அதில்  அன்னாரின் மார்பளவுச் சிலை நிறுவப்பட்டுள்ளது. நினைவில்லத்தில் மகாகவி  பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் புகைப்படங்களும், வாழ்க்கை  குறிப்பும், அவரது படைப்புகளும், சிறு நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக  அரசின் சார்பில் புனரமைக்கப்பட்டுள்ள பாரதியார் வாழ்ந்த நினைவு  இல்லத்தினையும் அதில் அமைக்கப்பட்டுள்ள அவரின் மார்பளவுச் சிலையினையும்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக நேற்று திறந்து  வைத்தார். மேலும், மகாகவி பாரதியார் குறித்த குறும்படத்தினை முதல்வர்  மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில்  தயாரிக்கப்பட்டுள்ள மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்பு மலரை  வெளியிட்டார். சிறப்பு மலரை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ்  பொய்யாமொழி பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைச்  செயலகத்திலிருந்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, செய்தி மக்கள் தொடர்பு இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் ஆகியோரும், காணொலிக்  காட்சி வாயிலாக உத்தரபிரதேசம் மாநிலம், வாரணாசியிலிருந்து செய்தித்துறை  அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு  செயலாளர் ரா.செல்வராஜ், வாரணாசி கூடுதல் ஆட்சியர் குலாப் சந்திரா, மகாகவி  பாரதியாரின் தங்கை மகன் பேராசிரியர் கேதார வெங்கட கிருஷ்ணன், தங்கை மகனின்  மகன் ரவிக்குமார், மகள்கள் ஆனந்த சீனிவாசன், ஜெயந்தி முரளி, கூடுதல்  இயக்குநர்(மக்கள் தொடர்பு) மு.பா.அன்புச்சோழன் மற்றும் அரசு உயர்  அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: