தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று இரவு சென்னையை நெருங்கியது. இதனால் நேற்று மாலையில் இருந்து கனமழை பெய்ய தொடங்கியது. இரவு செல்ல செல்ல காற்றுடன் மழையின் வேகம் அதிகரித்தது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. புயல் அதிகாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரவு 11.30 மணியில் இருந்து புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே மாமல்லபுரம் அருகே அதிகாலை 1.30 மணிக்கு இடையே கரையை கடந்தது.

கரையை கடக்கும்போது 75 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. நள்ளிரவு நேரத்தில் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்று வீசியது. மரங்கள், மரக்கிளைகள், மின் கம்பங்கள், விளம்பர பலகைகள் சூறாவளி காற்றில் விழுந்தன. ஆனாலும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. புயலாக கரையை கடந்த மாண்டஸ் இன்று அதிகாலை 5.30 மணி நிலவரப்படி வேலூர் அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து நிலவுகிறது. இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று பிற்பகலுக்குள் படிப்படியாக வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாக மாறக்கூடும். இதன் காரணமாக வட தமிழகத்தில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, நீலகிரி, புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. புயல் கரையை கடந்ததால் தென்மேற்கு வங்கக்கடலில் இன்று காலையில் இருந்து காற்று படிப்படியாக குறைந்து உள்ளது.

55 கி.மீட்டரில் இருந்து 30-40 கி.மீ ஆக காற்றின் வேகம் குறையும். தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா, வட இலங்கை கடலோர பகுதிகளிலும் காற்றின் வேகம் படிப்படியாக குறையும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதனால் இன்று மாலை வரை மேற்கண்ட கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. புயல் வலுவிழந்து வட தமிழக பகுதியில் நிலவுவதால் குடிசை, மெட்டல் ஷீட் போன்றவை காற்றில் பறக்கக்கூடும். மரக்கிளைகள், மின் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Related Stories: