குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்: இன்று எம்எல்ஏக்கள் கூட்டத்தில் மீண்டும் தேர்வாகும் பூபேந்திர படேல்

ஆமதாபாத்: குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய ஆட்சி அமைக்க வசதியாக தனது ராஜினாமா கடிதத்தை அவர் கவர்னரிடம் ஒப்படைத்தார். குஜராத் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 182 இடங்களில் 156 இடங்களை பாஜ  கைப்பற்றி மாபெரும் வெற்றி  பெற்றது.  காங்கிரஸ் வெறும் 17 இடங்களில் மட்டுமே வெற்றி  பெற்று பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

புதிதாக களமிறங்கிய ஆம் ஆத்மி 5  இடங்களும், சமாஜ்வாதி கட்சி 1, சுயேச்சை 3 இடங்களிலும் வெற்றி  பெற்றுள்ளனர். இதையடுத்து புதிய முதல்வராக மீண்டும் பூபேந்திரபடேல் நாளை மறுநாள் பதவி ஏற்க உள்ளார். இதையடுத்து புதிய அமைச்சரவை பதவி ஏற்க வசதியாக தனது முதல்வர் பதவியை பூபேந்திர படேல் நேற்று ராஜினாமா செய்தார்.  

தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் ஆச்சார்யா தேவ்ரத்திடம் அவர் வழங்கினார்.  அவருடன் குஜராத் மாநில பா.ஜ தலைவர் சிஆர் பட்டேல், கட்சி கொறடா பங்கஜ் தேசாய் ஆகியோர் சென்று இருந்தனர். அவரது ராஜினாமாவை கவர்னர் ஏற்றுக்கொண்டார். 12ம் தேதி புதிய முதல்வராக பதவி ஏற்கும் வரையில்  பதவியில் நீடிக்கும்படி பூபேந்திர படேலை அவர் கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையே பா.ஜ புதிய எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு காந்திநகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகமான கமலத்தில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் புதிய முதல்வராக மீண்டும் பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட உள்ளார். இந்த கடிதத்துடன் தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வலியுறுத்தி கவர்னரை பூபேந்திரபடேல் சந்தித்து உரிமை கோருவார். அதை தொடர்ந்து 12ம் தேதி அவர் புதிய முதல்வராக பதவி ஏற்பார். காந்திநகரில் உள்ள ஹெலிபேட் மைதானத்தில் புதிய அரசு பதவி ஏற்கும் விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பா.ஜ பார்வையாளர்கள்: புதிய முதல்வராக பூபேந்திரபட்டேலை தேர்வு செய்வதற்காக மத்திய பார்வையாளர்களாக ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் எடியூரப்பா, அர்ஜூன் முண்டா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: