காசியில் வாழ்ந்த வீட்டில் பாரதியின் மார்பளவு சிலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்

சென்னை: காசியில் மகாகவி பாரதி வாழ்ந்த வீட்டில் அவருடைய மார்பளவு சிலையை வருகிற 11ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் ‘பாரதி யார்’ இயல், இசை, நடனம் கலந்த வரலாற்று நாடகம் கடந்த 7ம் தேதி சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு அரங்கில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் செல்வராஜ், இயக்குநர் ஜெயசீலன், அரசு அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

முதல்வர் அறிவிப்பினை சிறப்பாக செயல்படுத்திடும் பொருட்டு எஸ்.பி.கிரியேசன்ஸ் தயாரிப்பில் எஸ்.பி.எஸ்.ராமன் குழுவினரின் ‘பாரதி யார்’ இயல், இசை, நடனம் கலந்த வரலாற்று நாடகம் முதற்கட்டமாக சென்னையில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் நடத்தப்பட்டது. செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ‘பாரதி யார்’ இயல், இசை, நடனம் கலந்த வரலாற்று நாடகத்தை பாராட்டி பேசியதாவது: ‘பாரதி யார்’ என்கிற தலைப்பில் பாரதியாருடைய சுதந்திர வேட்கையை இந்த வரலாற்று நாடகம் மூலம் இங்கே நம் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்ற கலைஞர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த நன்றியையும், வாழ்த்துகள். முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில், காசியிலே மகாகவி பாரதி வாழ்ந்த வீட்டில் அவருடைய மார்பளவு சிலையை வருகிற 11ம் தேதி முதல்வர் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்க இருக்கின்றார்.

கலைஞர் எந்த அளவிற்கு நம்முடைய சுதந்திர போராட்ட தியாகிகளுக்கும், தமிழ் மொழி காவலர்களுக்கும், அவர்களுடைய புகழுக்கு மரியாதை செலுத்தினாரோ, அந்த அளவிற்கு தொடர்ந்து அவருடைய வழியை பின்பற்றி முதல்வர் தமிழக அரசை வழிநடத்தி கொண்டிருக்கிறார். இதுபோன்ற நிகழ்வுகளை சென்னை மட்டுமல்லாமல், கோவை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி போன்ற மாநகரங்களிலும் நடத்தப்பட வேண்டும். இந்த வரலாற்று நாடகம் நிச்சயமாக தமிழக மக்கள் மத்தியில் குறிப்பாக நம்முடைய இளைஞர்கள் மத்தியில் மீண்டும் ஒரு சுதந்திர வேட்கையை உருவாக்கும். சுதந்திரத்தை பெற்றுத்தந்த தியாகிகளுக்கு புகழ் வணக்கம் செலுத்துகிற நிகழ்வாகவும் அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: