சர்ச்சைக்குரிய புத்தக விநியோக விவகாரம்; சட்டக் கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட்: மேலும் 3 பேராசிரியர்கள் பணிநீக்கம்

இந்தூர்; இந்தூரில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் சர்ச்சைக்குரிய புத்தகம் வழங்கப்பட்ட விவகாரத்தில், கல்லூரியின் முதல்வர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவ்விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில், கடந்த சில நாட்களுக்கு முன் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய புத்தகம் தொடர்பாக சலசலப்பு ஏற்பட்டது.

அந்த புத்தகத்தில், புதிய மாணவர்களிடையே மதவெறியை ஊக்குவிப்பதாகவும், அரசு மற்றும் ராணுவத்தைப் பற்றிய எதிர்மறையான விஷயங்களை பரப்பி வரும்படியும் இருந்ததாக கூறப்படுகிறது. இவ்விவகாரம் தொடர்பாக குறிப்பிட்ட மாணவர் அமைப்பினர் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் மத்திய பிரதேச உயர்கல்வித்துறை அமைச்சர் மோகன் யாதவ் உத்தரவின்படி விசாரணை குழு அமைக்கப்பட்டது.

அந்த குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் கல்லூரி முதல்வர் டாக்டர் ரஹ்மான், உதவிப் பேராசிரியர் டாக்டர்  மிர்சா மவுஜிஸ் பைக் ஆகியோர் இடைநீக்கம்  செய்யப்பட்டனர். மேலும் கல்லூரியின் 3 பேராசிரியர்கள் பணி  நீக்கம் செய்யப்பட்டனர். இவ்விவகாரம் தொடர்பாக கல்லூரியின் முதல்வர் மற்றும் பேராசிரியர் உட்பட புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: