தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்ல தடை-சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

ஊட்டி :  தொட்டபெட்டா காட்சி முனைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை நீடிப்பதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சுற்றுலா நகரமான ஊட்டியில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா,தேயிலை பூங்கா,படகு இல்லம் மற்றும் தொட்டபெட்டா சிகரம் ஆகியவைகளுக்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகள் சந்திக்கும் முக்கிய சிகரமான, அதேசமயம் உயரமான சிகரமான தொட்டபெட்டாவிற்கு சுற்றுலா பயணிகள் அதிகளவு செல்கின்றனர். இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் இங்குள்ள காட்சி முனைக்கு சென்று, அங்குள்ள செங்குத்தான பாறைகளில் நின்று புகைப்படம் எடுத்து வந்தனர்.

காட்சி முனைகளில் உள்ள பாறகைளில் இருந்து தவறி விழுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பதால், அங்கு பாதுகாப்பு கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் தொட்டபெட்டா சிகரத்தை காண்பதற்காகவே வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 28ம் கோவையை சேர்ந்த மூதாட்டி ஒருவர் அங்குள்ள மலையில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மூதாட்டி தற்கொலை செய்துக் கொண்ட நாள் முதல் காட்சி முனைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை அனுமதி மறுத்துள்ளது. இதனால், இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கடந்த இரு மாதங்களாக காட்சி முனைக்கு செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

எனவே, தொட்டபெட்டா சிகரத்தில் உள்ள காட்சி முனை பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்து, வழக்கம் போல், சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கம்பி வேலிகளின் உயரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இல்லையேல் இங்கு நாளடைவில் சுற்றுலா பயணிகள் செல்வது குறைய வாய்ப்புள்ளது. இதனால், சுற்றுலாத்துறைக்கும் மற்றும் வனத்துறைக்கும் வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

Related Stories: