சர்வதேச கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் கூட்டாளியான சிலை கடத்தல் புரோக்கர் தீனதயாளன் உயிரிழப்பு: பல நூறு கோடிக்கு சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்தியவன்

சென்னை: சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் கூட்டாளியான சிலை கடத்தல் புரோக்கர் தீனதயாளன் முதுமையால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் தீனதயாளன்(82). தொழிலதிபரான இவர், சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி 2வது தெருவில் வசித்து வந்தார். இவர் ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் பழங்கால சிலைகள் விற்பனை கடை ஒன்றும் நடத்தி வந்தார். அவரது கடை மூலம் சட்டவிரோதமாக மும்பை வழியாக வெளிநாடுகளுக்கு பல கோடி மதிப்புள்ள பழமையான கோயில் சிலைகள் கடத்தப்பட்டதாக புகார் எழுந்தது.

சிலை கடத்தல் வழக்கில் சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 2012ம் ஆண்டு ஜெர்மன் நாட்டில் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். சுபாஷ் கபூரை காவலில் எடுத்து விசாரணை நடத்திய போது, தமிழக கோயில்களில் இருந்து பழங்கால சிலைகளை தொழிலதிபர் தீனதயாளன் மூலம் கடத்தியது தெரியவந்தது. அதைதொடர்ந்து தீனதயாளனுக்கு சொந்தமான சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீடு மற்றும் குடோனில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், சர்வதேச மதிப்பில் ரூ.900 ஆயிரம் கோடி மதிப்புள்ள அரியவகை ஐம்பொன் சிலைகள், கற்சிலைகள், தஞ்சை ஓவியங்கள் உள்ளிட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான 42 ஓவியங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த தீனதயாளனை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 2016ம் ஆண்டு ஜூன் மாதம் கைது ெசய்தனர். பின்னர் அவர் கோயில்களில் இருந்து திருடப்பட்ட சிலைகள் அனைத்தும் மும்பையில் உள்ள தனது தொழில் கூட்டாளி மூலம் கப்பல்களில் வெளிநாடுகளுக்கு கடத்தியது தெரியவந்தது. அதேநேரம் கைது செய்யப்பட்ட தீனதயாளன் சிலை கடத்தல் வழக்கில் அப்ரூவராகி சிலை கடத்தல் குறித்து போலீசாருக்கு முழுமையான தகவல் அளித்தார்.  

சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட தீனதயாளன் 2 ஆண்டுகள் சிறையில் இருந்தார். பிறகு ஜாமீனில் வெளியே வந்தார். பிறகு முதுமையால் கடந்த 2 ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் திடீரென தீனதயாளனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே தீனதயாளனை அவரது உறவினர்கள் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தீனதயாளன் நேற்று முன்தினம் நள்ளிரவு உயிரிழந்தார்.

Related Stories: