நாடாளுமன்ற தேர்தல் குறித்து பாஜ மாவட்ட தலைவர்களுடன் அண்ணாமலை முக்கிய ஆலோசனை: பிரச்னையில் சிக்கும் நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை; பாஜ தலைவர் எச்சரிக்கை

சென்னை: நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து பாஜ மாவட்ட தலைவர்களுடன், மாநில தலைவர் அண்ணாமலை நேற்று ஆலோசனை நடத்தினார். நாடாளுமன்ற தேர்தல் 2024ம் ஆண்டு நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் பாஜ தேர்தல் பணிகளை இப்போதே முடுக்கி விட்டுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், மாநிலத்தில் கட்சியின் செயல்பாடு குறித்தும் ஆலோசிப்பதற்கான ஆலோசனை கூட்டம் டெல்லியில் பிரதமர் மோடி, பாஜ தலைவர் ஜெ.பி. நட்டா தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் அனைத்து மாநில பாஜ தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தமிழகம் சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் இப்போதே நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை முடுக்கி விட வேண்டும். பூத் அளவில் பாஜவை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கூட்டத்தில் மாநில தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் பாஜ மாவட்ட தலைவர்கள் கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று காலை நடந்தது. பாஜ தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பாஜ அனைத்து மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

மேலும் தேர்தலை சந்திக்கும் வகையில் பூத் அளவில் கமிட்டியை வலுப்படுத்த வேண்டும். அதற்கான பணிகளில் இப்போதே ஈடுபட வேண்டும். பூத் கமிட்டியை ஒழுங்காக அமைக்காதவர்களின் கட்சி பதவிகள்  பறிக்கப்படும். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும். கூட்டணி தொடர்பாக கட்சி மேலிடம் எந்த நிலைப்பாட்டை எடுக்கிறதோ அதற்கு ஆதரவு அளிக்க வேண்டும். அதுவரை தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் பாஜ சார்பில் தேர்தல் பணிகளை முடுக்கி விட வேண்டும். மத்திய பாஜ அரசின் சாதனைகளை மக்களிடம் நேரடியாக எடுத்து செல்ல வேண்டும். பாஜ நிர்வாகிகள் எந்த ஒரு தவறை செய்தாலும், பிரச்னைகளில் ஈடுபட்டாலும்  கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கட்சி பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று அண்ணாமலை கூட்டத்தில் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. பாஜவில் தொகுதி மறுவரையறைக்கு பின்னர் நடைபெறும் முதல் மாவட்ட தலைவர்கள் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: