வரும் 15ம் தேதி முதல் ஆக.10ம் தேதி வரை ஆற்காடு சாலையில் போக்குவரத்து மாற்றம்: மெட்ரோ ரயில் பணிக்காக நடவடிக்கை

சென்னை: மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட கட்டுமான பணிகள் காரணமாக ஆற்காடு சாலையில் கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் போரூர் மேம்பாலம் சந்திப்பு வரை வரும் 15ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்து சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை: சென்னை ஆற்காடு சாலையில் கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் போரூர் மேம்பாலம் சந்திப்பு  வரை சென்னை மெட்ரோ ரயில்  இரண்டாம் கட்ட கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால், தற்போதுள்ள போக்குவரத்து முறையில், தற்காலிகமாக பின்வரும் மாற்றங்கள் வரும் 15ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உத்தேசிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஆற்காடு சாலை காந்தி சாலை சந்திப்பிலிருந்து லாமெக் பள்ளி வரையிலான (ராதாகிருஷ்ணன் சாலை) சந்திப்பு வரை ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டு வாகனங்கள் போரூர் நோக்கி செல்ல மட்டும் அனுமதிக்கப்படும். ஆற்காடு சாலையில், போரூர் மார்க்கத்திலிருந்து வடபழனி நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் வளசரவாக்கம் லாமேக் பள்ளி சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் சென்று, சிந்தாமணி விநாயகர் கோயில் தெருவிற்கு வலது புறம் திரும்பி சென்று, மீண்டும் காந்தி சாலைக்கு வலதுபுறம் திரும்பி சென்று, மீண்டும் ஆற்காடு சாலைக்கு இடதுபுறம் திரும்பி வழக்கம்போல் செல்லலாம். காமராஜர்  சாலை மற்றும் நேரு சாலையிலிருந்து ஆற்காடு சாலையில் இடது புறம் திரும்பி வடபழனி நோக்கி செல்ல அனுமதி இல்லை.

மேற்கண்ட சாலைகளிலிருந்து வலதுபுறம் திரும்பி போரூர் மார்க்கமாக மட்டுமே செல்ல இயலும்.  விருகம்பாக்கத்தில் இருந்து போரூர் நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் எவ்வித மாற்றமுமின்றி வழக்கம்போல் செல்லலாம். எனவே பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: