உலக செஸ் சாம்பியன் ஆகவேண்டும்: பிரக்ஞானந்தா பேட்டி

திருவள்ளூர்: தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு கடந்த நவம்பர் 30ம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அர்ஜுனா விருது  வழங்கி கவுரவித்தார்.  இதையடுத்து நேற்று முன்தினம் முதல்வர் மு.க.ஸ்டாலினை, வேலம்மாள் பள்ளியின் தாளாளர் எம்.வி.எம்.வேல்மோகன், பள்ளி முதல்வர் அரவிந்த் மற்றும் தனது தாயார் நாகலட்சுமி ஆகியோருடன்  பிரக்ஞானந்தா சந்தித்து அர்ஜுனா விருதை காண்பித்து வாழ்த்து பெற்றார்,

இந்த நிலையில், சென்னை, முகப்பேர், வேலம்மாள் முதன்மை பள்ளியில் பிரக்ஞானந்தாவுக்கு பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு வேலம்மாள் பள்ளியின் தாளாளர் எம்.வி.எம்.வேல்மோகன் தலைமை வகித்தார். அமைச்சர்கள் சிவமெய்யநாதன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சதுரங்க போட்டியின் அடையாளமாக திகழும் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு பள்ளியின் மூலம் வழங்கப்படும் ரூ.10 லட்சம் பரிசுத்தொகையினை வழங்கி பாராட்டி பெருமைப்படுத்தினர்.

இதன்பிறகு பிரக்ஞானந்தா கூறியதாவது; முதலமைச்சரை நேரில் சந்தித்து அர்ஜுனா விருது வாங்கியதை காண்பித்து வாழ்த்து பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் நடைபெற்றதை, இன்னமும் பல நாடுகளுக்கு சென்று விளையாடும்போது அங்குள்ள விளையாட்டு வீரர்கள் தங்கிய இடம் உபசரிப்பு ஆகியவை அருமையாக இருந்தது. இது தமிழனாக தனக்கு பெருமையாக இருக்கிறது. அர்ஜுனா விருதுக்கு அடுத்தபடியாக உலக செஸ் சாம்பியன் ஆவதே ஒரே குறிக்கோள்.

அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. அடுத்தாக இஸ்ரேல் நாட்டிற்கு சென்று விளையாட உள்ளேன்.  இவ்வாறு கூறினார். விழாவில் அம்பத்தூர் தொகுதி எம்எல்ஏ ஜோசப் சாமுவேல், பள்ளி முதல்வர், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

Related Stories: