ராமநாதபுரம் மாவட்டத்தில் தொல்லியல் ஆய்வு பணிகள் விரைவில் நடத்தப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

சாயல்குடி: ராமநாதபுரம் புராணங்கள், புரதானங்கள், சங்ககாலம் உள்ளிட்டவற்றில் தொடர்புடைய மாவட்டம் என்பதால் பல தொல்பொருட்கள் நிறைந்து காணப்படுகிறது. குறிப்பிட்ட பகுதிகளில் தடயங்கள் சேகரிக்கப்பட்டு தொல்லியல் ஆய்வு நடத்தப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம் ராமாயணம் உள்ளிட்ட புராணங்களின் தடயங்கள், மாணிக்கவாசகரின் பொன்னூஞ்சல் உள்ளிட்ட பதிகங்கள் மற்றும் கிடைக்கப்பெற்ற ஓலைச்சுவடிகள், அகநானூறு, புறநானூறு, நற்றினை போன்ற இலக்கிய நூல்கள், நடுகல் மரபு, முதுமக்கள் தாழி உள்ளிட்ட ஆதாரங்கள் மூலம் தெரிய வருகிறது.

இதுபோன்று அழகன்குளம், தொண்டி, தேரிருவேலி மற்றும் பெரியபட்டிணம்(தஞ்சை தமிழ் பல்கலைகழகம் ஆய்வு) நடத்தப்பட்ட அகழாய்வுகளின் அறிக்கைப்படி சங்க காலத்திலேயே பல துறைமுகங்களையும், வெளிநாட்டு வணிக தொடர்புகளையும் கொண்டுள்ளது தெரிய வருகிறது. பாண்டிய மன்னர்கள், சேதுபதி மன்னர்கள் ஆட்சி செய்த மாவட்டம் என்றாலும் சேரர், சோழர்கள் மற்றும் நாயக்கர்களுக்கும் வணிக ரீதியில் தொடர்புடைய பல சான்றுகள் உள்ளன.

இதனை ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் கல்வெட்டுகள், கோயில்கள், சிலைகள் மற்றும் வரலாற்று தகவல்களின் அடிப்படையில் அறியலாம். இதற்கு சாட்சியாக ராமேஸ்வரம், திருஉத்தரகோசமங்கை, திருப்புல்லாணி, தேவிப்பட்டிணம் நவபாசனம் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் உள்ள சிலைகள், சிற்பங்கள், கல்வெட்டுகள் மற்றும் ராமநாதபுரம் ராமலிங்க விலாசம், கமுதி கோட்டை உள்ளிட்டவை இருக்கின்றன.

இதுபோன்று மாவட்டத்தில் போகலூர் முல்லைக்கோட்டை, கீழக்கரை நத்தம்குலம்பதம், மண்டபம் புதுமடம், கடலாடி மங்களம், சாயல்குடி கூரான்கோட்டை உள்ளிட்ட கிராம பகுதிகளில் பல தொல் பொருட்கள், வரலாற்று தடயங்கள் நிறைந்து கிடக்கிறது. இதனால் மாவட்டத்தின் சில இடங்களில் தொல்லியல் ஆய்வு நடத்த வேண்டும் என தொல்லியல் ஆய்வாளர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் தொல்பொருள் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ராமநாதபுரம் மாவட்டத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் தொல்பொருள் குறித்த தடயங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அதன் அடிப்படையில் தடயங்கள் சேகரிக்கும் பணி, ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுரு கூறும்போது, ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம், நம்ம ஊரு வரலாறு என வாய்மொழி தகவல்கள், கல்வெட்டு, சிலைகள், கட்டிடங்கள், தடயங்கள் உள்ளிட்டவற்றை களஆய்வு செய்து வருகிறோம். இந்த ஆய்வின் மூலம் மாவட்டத்தில் குறிப்பிட்ட இடங்களில் பல்வேறு தொல் பொருட்கள் நிறைந்து காணப்படுகிறது. போகலூர் அருகே முல்லைகோட்டை பகுதியில் சுமார் 50 ஏக்கரில் ஒரு ஊர் இருந்ததற்கான தடயங்கள் உள்ளன.

இதனை முழுமையாக ஆய்வு செய்தால் கீழடி போன்று பல தடயங்கள், தகவல்கள் கிடைக்கும். இதனை போன்று கலையூர், பாசிப்பட்டிணம், மங்களம், கூரான்கோட்டை உள்ளிட்ட குறிப்பிட்ட சில கிராம பகுதிகளில் ஆய்வு செய்தால் பல தகவல்கள், ஆதாரங்கள், தொல்பொருட்கள் கிடைக்கும். மேலும் ஆர்.எஸ்.மங்கலம் செங்கமடை ஆறுமுககோட்டை, மூக்கையூர் பழமையான தேவாலயம் உள்ளிட்ட சிலவற்றை ஆய்வு செய்து நினைவு சின்னங்களாக அறிவிக்க வேண்டும்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தப்படி ராமநாதபுரத்தில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் எளிதாக வந்து செல்லும் அளவில் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் அருங்காட்சியகத்திற்கு கட்டிடம் விரைவில் கட்ட நடவடிக்கை வேண்டும் என்றார். தமிழக தொழில்துறை, பண்பாட்டுத்துறை மற்றும் தொல்பொருள் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறும்போது, ராமநாதபுரம் மாவட்டம் மிக தொன்மையானது என்பதற்கு பல சான்றுகள், ஆதாரங்கள் உள்ளன.

இன்று வரை தடயங்கள் முதல் கட்டிடங்கள், சிலைகள் வரை நினைவு சின்னங்களாக உள்ளது. அழகன்குளம், தொண்டி, தேரிருவேலி மற்றும் பெரியப்பட்டிணம் பகுதியில் ஆய்வு பணி நடந்தது. இதுபோன்று சேதுபதி மன்னர்களின் பூர்வீகமான முதல் அரண்மணை அமைந்திருந்த வைகை ஆற்றின் தென்கரை பகுதியான தற்போதைய போகலூர் அருகே முல்லைக்கோட்டை, மன்னர் பூலித்தேவனின் பூர்வீகமாக கூறப்படுகின்ற கடலாடி குண்டாறு கரையில் உள்ள மங்களம் சிவன்கோயில் பகுதி, கூரான்கோட்டை பகுதி, பரமக்குடி அருகே கலையூர் உள்ளிட்ட குறிப்பிட்ட சில இடங்களில் தடயங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வு பணிகள் நடத்தப்படும். அதில் கிடைக்கின்ற ஆய்வு அறிக்கை, முடிவுகளின்படி அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதன் மூலம் வரலாற்றிற்கு புதிய அறிய தகவல்கள், தரவுகள் கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கலாம்.

மேலும் நினைவு சின்னங்களாக உள்ள ராமநாதபுரம் ராமலிங்க விலாசம், கமுதிகோட்டை உள்ளிட்ட புராண சின்னங்கள் பழமை மாறாமல் பாதுகாக்க புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories: