தெரு நாய்கள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்: தாம்பரம் மாநகராட்சி ஆணையர் தகவல்

தாம்பரம்: தெருநாய்கள் குறித்து பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தாம்பரம் மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார். தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெரு நாய்கள் சாலையில் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என அனைவரையும் திடீரென துரத்தி செல்வது, சிறுவர்களை கடிப்பது, குப்பைக் கழிவுகளை சாலையில் இழுத்து வந்து போடுவது என தினமும் அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்கு தாம்பரம், கஸ்தூரிபா பகுதியில் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த சமீர் என்ற சிறுவனை தெரு நாய் கடித்தன. இதில் சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதேபோல, அதே பகுதியில் 3க்கும் மேற்பட்டவர்களை தெரு நாய் கடித்ததால் அப்பகுதிக்கு பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வரும் நிலை ஏற்பட்டது. மேற்கு தாம்பரம், முல்லை நகர் பிரதான சாலை பகுதியிலும் தெரு நாய்கள் துரத்தியதில் ஏராளமானோர் வாகனங்களில் இருந்து கீழே விழுந்து சமீப காலமாக காயமடைந்து வருகின்றனர். இதேபோல தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதும் பல்வேறு இடங்களில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் சார்பில் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் கூறியதாவது: தெரு நாய்களை கட்டுப்படுத்தும் விதமாக பல்லாவரம் மற்றும் செம்பாக்கம் ஆகிய இரண்டு பகுதிகளில் அதற்கான பிரத்தியேக விலங்குகள் கருத்தடை மையங்கள் உள்ளன. அறுவை சிகிச்சை மையங்களுடன் கூடிய பிரத்தியேக மையங்களில் தெருநாய்கள் பிடிக்கப்பட்டு தேர்ந்த கால்நடை மருத்துவர்கள் மூலம் தெரு நாய்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த அமைப்புகள் அனைத்துமே இந்திய விலங்குகள் வாரியத்தின் அங்கீகாரத்தை பெற்ற அமைப்புகள்.

தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு அவற்றுக்கான சிகிச்சை முடித்து அதற்கு வெறிநாய் தடுப்பூசி போடப்பட்டு எங்கு அந்த தெரு நாய்களை பிடித்தோமோ அங்கே மீண்டும் கொண்டு விடப்படுகிறது. இதை பொறுத்தமட்டில் தாம்பரம் மாநகராட்சியில் ஒவ்வொரு வாரமும் இதற்கான பிரத்தியேகமான நாட்கள் ஒதுக்கப்பட்டு அதற்கான மருத்துவர்கள் மூலம் சிகிச்சைகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது அதிக எண்ணிக்கையில் புகார் வரும் காரணத்தால் மேலும் ஒரு விலங்கு கருத்தடை மையம் அமைக்க அனகாபுத்தூர் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தெரு நாய் குறித்து பிரச்னை ஏதாவது இருந்தால் தாம்பரம் மாநகராட்சியின் 1800 425 4355 கட்டணமில்லா எண்ணுக்கு தொடர்பு கொண்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: