மதசார்பற்ற ஜனநாயக கூட்டணி வலுவுடன் உள்ளது; துரை வைகோ

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ அளித்த பேட்டி: நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பதை மதிமுக தலைமையும் மதசார்பற்ற ஜனநாயக கூட்டணி கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலினும் இணைந்து முடிவு செய்வர். 2024 நாடாளுமன்ற தேர்தலில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாஜ மதவாத சக்திகளை எதிர்க்கும் அனைத்து இயக்கங்களும் ஓரணியில் கூட்டணியாக திரள வேண்டும்.

தமிழக மக்களின் நலனுக்கு ஆளுநர் செயல்படவில்லை. தமிழகத்தில் மதசார்பற்ற ஜனநாயக கூட்டணி வலுவோடு இருக்கிறது. இதில் மேலும் சில கட்சிகள், இயக்கங்கள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் கூட்டணிக்கு மேலும் வலுசேர்க்கும்.

இவ்வாறு கூறினார்.

கும்பகோணத்தில் அம்பேத்கர் படத்துக்கு காவி உடை அணிவித்து நெற்றியில் விபூதி பூசியிருப்பதை போல இந்து மக்கள் கட்சி சார்பில் போஸ்டர் ஒட்டியது குறித்த கேள்விக்கு, இவர்கள் திருவள்ளுவரையும் விட்டு வைக்கவில்லை. அம்பேத்கர் ஜாதி, மத, இனம் அனைத்துக்கும் அப்பாற்பட்டவர். ஆனால் இன்று அவரையும் விட்டு வைக்கவில்லை’’ என்று துரை வைகோ கூறினார்.

Related Stories: