சென்னை மாநகராட்சியின் கட்டமைப்பு திட்டங்கள், செயல்பாடுகள் எப்படி? அமெரிக்காவின் சான்ஆன்டோனியோ மாநகர மேயர் குழு கலந்துரையாடல்

சென்னை: அமெரிக்காவின் சான் ஆன்டோனியோ மாநகரத்துடன், சென்னை மாநகராட்சி இணைந்து செயல்படுவது குறித்த கலந்துரையாடல் கூட்டத்தில், இரு மாநகர மேயர்களும் முழு ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதி அளித்தனர். அமெரிக்க ஐக்கிய நாட்டின் சான் ஆன்டோனியோ மாநகரத்தின் மேயர் ரான் நிரன்பர்க் தலைமையிலான குழுவினர் சகோதரத்துவ நகரங்களின் இணைப்பு ஒப்பந்தங்களின்படி, சென்னை மாநகராட்சி மற்றும் அமெரிக்க நாட்டின் சான் ஆன்டோனியோ நகரம் ஆகியவை இணைந்து செயல்படுவது குறித்த கலந்துரையாடல் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நேற்று நடந்தது.

அப்போது, மேயர் பிரியா, அமெரிக்க ஐக்கிய நாட்டின் சான் ஆன்டோனியோ மாநகர மேயர் ரான் நிரன்பர்க் மற்றும் அவரது குழுவினருக்கு சென்னை மாநகராட்சி சார்பில் நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார். கூட்டத்தில், சென்னை மாநகராட்சியின் கட்டமைப்பு, திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி விரிவாக எடுத்துரைத்தார்.

சென்னை மாநகராட்சி மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டின் சான் ஆன்டோனியோ மாநகரம் ஆகியவை சகோரத்துவ நகரங்களின் இணைப்பாக இரு மாநகர மக்களது ஆக்கப்பூர்வ உறவுகளை மேம்படுத்துவதுடன், கல்வி, சுகாதாரம், அடிப்படை கட்டமைப்பு குறித்து இரு மாநகரங்களும் தங்களை மேம்படுத்திக் கொள்ளும் வகையிலும், இரு மாநகர மக்களின் பண்பு, அறிவுத்திறன், பொருளாதாரம் ஆகியவைகளை மேலும் வளப்படுத்தும் வகையிலும் சென்னை மாநகராட்சி மேயரும், சான் ஆன்டோனியோ நகர மேயரும் ஒத்துழைப்பு நல்கி செயல்படுவோம் என தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து, மாமன்றக் கூட்டரங்கை சான் ஆன்டோனியோ நகர மேயர் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டனர். அப்போது, மன்றக் கூட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மேயர் பிரியா எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில், துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சான் ஆன்டோனியோ நகர முன்னாள் மேயர் பில் ஹார்டுபெர்கர், அமெரிக்க துணைத் தூதரகத்தின் துணை தூதர் ஜுடித் ரவின், சென்னை மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் (கணக்கு) தனசேகரன், துணை ஆணையர்கள், வட்டார துணை ஆணையர்கள், சான் ஆன்டோனியோ நகர குழுவினர் கலந்து கொண்டனர்.

Related Stories: