தீபத்திருவிழா கோலாகலம் 2,668 அடி உயர மலை மீது மகாதீபம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கா்ர்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, 2,668 அடி உயர மலை மீது ‘மகா தீபம்’ ஏற்றப்பட்டது. அடிமுடி காணாத ஜோதிப்பிழம்பாக அண்ணாமலையார் காட்சியளித்ததை, 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக அமைந்திருப்பது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில். ஆறு ஆதாரத் தலங்களில் மணிப்பூரக தலமாகவும், நினைக்க முக்தித்தரும் திருத்தலமாகவும் போற்றப்படுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழா உலக அளவில் பிரசித்திபெற்றது. அதன்படி, இந்த ஆண்டு தீபத்திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் தீபத்திருவிழா உற்சவம் நடந்தது.

அதையொட்டி, தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரரும், இரவு உற்சவத்தில் பஞ்சமூர்த்திகளும் மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தீபத்திருவிழாவின் 10ம் நாள் உற்சவமான மகாதீப பெருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. விழாவை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்று முன்தினம் இரவில் இருந்தே திருவண்ணாமலையில் திரண்டிருந்தனர். நேற்று அதிகாலை 4 மணியளவில் அண்ணாமலையார் கோயில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது.

பின்னர், பரிச்சாரக சிவாச்சாரியார்கள் மூலம் மகா மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, ரதவிளக்கு வழியாக 2ம் பிரகாரம், 3ம் பிரகாரம் வழியாக வந்து அனைத்து சன்னதிகளிலும் தீபம் ஏற்றப்பட்டது. நிறைவாக, சொர்ணபைரவர் சன்னதியில் மடக்கு தீபம் காட்சியளித்தது. அதைத்தொடர்ந்து, மகா தீபப்பெருவிழா நேற்று மாலை தொடங்கியது. பகல் 2 மணியளவில் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். மாலை 4.37 மணியளவில், பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் உடனாகிய அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் அலங்கார ரூபத்தில் கோயில் 3ம் பிரகாரம் தீப தரிசன மண்டபத்தில் எழுந்தருளினர்.

பின்னர், உமையாளுக்கு இடபாகம் வழங்கிய அண்ணாமலையார், ‘அர்த்தநாரீஸ்வரர்’ திருக்கோலத்தில் ஆனந்த தாண்டவத்துடன் மாலை 5.58 மணியளவில் கோயில் தங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினார். ஆண்டுக்கு ஒருமுறை, மகா தீபத்தன்று மட்டுமே சில நிமிடங்கள் காட்சிதரும் அர்த்தநாரீஸ்வர் அருள் காட்சியை தரிசித்த பக்தர்கள், ‘அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமுலையம்மனுக்கு அரோகரா’ என பக்தி பரவசத்துடன் விண்ணதிர முழக்கமிட்டனர்.

அதைத்தொடர்ந்து, மாலை 6 மணியளவில் கோயில் கொடிமரம் அருகே அகண்டதீபம் ஏற்றப்பட்டது. அதே நேரத்தில், மகேசனின் திருவடிவான 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் ‘மகா தீபம்’ ஏற்றப்பட்டது. அண்ணாமலையார் துதி, பாமாலை, சங்கொலி முழங்க, பாரம்பரிய வழக்கப்படி பருவதராஜ குலத்தினர் மகா தீபம் ஏற்றினர்.

அப்போது, அகந்தை அழிக்கும் அண்ணாமலையார் அடிமுடி காணாத ஜோதிப்பிழம்பாக காட்சியளித்தார். கோயிலின் அனைத்து பிரகாரங்களும் தீபஒளியால் ஜொலித்தது. நகரெங்கும் வண்ணமயமான வாண வேடிக்கைகள் அதிர்ந்தன. வீடுகளில் நெய்தீபம் ஏற்றி மக்கள் வழிபட்டனர். தீப ஒளியால் திருவண்ணாமலை நகரமே பிரகாசித்தது. அண்ணாமலை மீது மகாதீபம் ஏற்ற 4,500 கிலோ நெய், 1,150 மீட்டர் திரி (காடா துணி), 20 கிலோ கற்பூரம் பயன்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு புதிய கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. மகா தீப கொப்பரையின் உயரம் ஐந்தரை அடியாகும். மகா தீப கொப்பரையில் அர்த்தநாரீஸ்வரர் திருவுருவம் தீட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால், மகா தீப விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை. இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் நீங்கி, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால், சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் திருவண்ணாமலையிலும் கிரிவலப்பாதையிலும் திரண்டிருந்து மகா தீபத்தை தரிசனம் செய்தனர். அண்ணாமலையார் கோயில், மாட வீதி, கிரிவலப்பாதை என காணும் திசையெங்கும் பக்தர்கள் வெள்ளத்தால் நிறைந்திருந்தது. நூற்றுக்ணக்கான இடங்களில் பக்தர்களுக்கு சுவையான அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.

மகாதீபத்தை தரிசிக்க மலையேறும் பக்தர்களுக்கு இந்த ஆண்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அனுமதி சீட்டு பெற்ற சுமார் 2,500 பேர் மட்டுமே மலைமீது செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஏடிஜிபி சங்கர் தலைமையில், வடக்கு மண்டல ஐஜி கண்ணன், 5 டிஐஜிக்கள், 32 எஸ்பிக்கள் உள்பட 13 ஆயிரம் போலீசார் மற்றும் 180 கமாண்டோ வீரர்கள் (எஸ்டிஎப்) பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்ட டிரோன்கள், 500க்கும் மேற்பட்ட இடங்களில் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணி நடந்தது.

* மலை மீது மகா தீபம் 11 நாட்கள் காட்சி தரும்

மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் காட்சிதரும். அதன்படி, வரும் 16ம் தேதி வரை மகா தீபத்தை பக்தர்கள் தரிசிக்கலாம். அதையொட்டி, தினமும் மாலை 6 மணிக்கு மலை மீது மகாதீபம் ஏற்றப்படும். அதற்காக, சுழற்சி முறையில் கோயில் திருப்பணியாளர்கள் மற்றும் பருவதராஜகுலத்தினர் மலைமீது முகாமிட்டு தீபம் ஏற்றும் திருப்பணியை மேற்கொள்கின்றனர். தீபம் ஏற்றுவதற்கு தேவையான நெய், திரி, கற்பூரம் ஆகியவை, சிறப்பு பூஜைகளுடன் தினமும் கோயிலில் இருந்து மலை உச்சிக்கு கொண்டு செல்லப்படும். எனவே, வரும் 16ம் தேதி வரை பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும் என்பதால், அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொது தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: