சின்னத்திரை நடிகையை திருமணம் செய்வதாக கூறி நகை, பணம் மோசடி: தனியார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு 10 ஆண்டுகள் சிறை..!!

ஈரோடு: சின்னத்திரை நடிகையை திருமணம் செய்வதாக கூறி நகை, பணத்தை மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தனியார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரோட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், சீரியல்களிலும் நடித்து வருகிறார். இவர் தனியார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இதன் மூலம் ஈரோடு முத்தம்பாளையத்தை சேர்ந்த தனியார் ஈவண்ட் நிறுவனத்தின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ராகுல் என்பவர் அறிமுகமாகியுள்ளார்.

இருவரும் 3 ஆண்டுகள் காதலித்த நிலையில், நடிகையை திருமணம் செய்துகொள்வதாக கூறி கோவையில் பலமுறை ராகுல் அவருடன் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. நடிகையிடம் இருந்து நகை மற்றும் 8 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றையும் திரும்ப பெறுவதாக கூறி ராகுல் பெற்றுள்ளார். 2016ம் ஆண்டு முதல் நடிகையை காதலித்த ராகுல், அவரை திருமணம் செய்துகொள்ள மறுத்ததுடன் நகை, பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றியதாக தெரிகிறது.

மேலும் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்யவும் ராகுல் முயற்சித்ததாக பாதிக்கப்பட்ட சின்னத்திரை நடிகை, ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு புகார் அளித்தார். இதன் பேரில் ராகுல் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஈரோடு மகளிர் நீதிமன்றம், தனியார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ராகுலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

Related Stories: