சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் அம்பேத்கர் சிலையை திறந்து வைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் அம்பேத்கர் சிலையை ஆளுநர் ஆர்.என். ரவி திறந்துவைத்தார். உலகின் மிகச்சிறந்த அரசியலமைப்பு சட்டம் என்று போற்றப்படக்கூடிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த முதன்மையான நபரான அம்பேத்கரின் 66வது நினைவு நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நினைவு நாளை அனுசரிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் அரசு சார்பில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறக்கூடிய நிகழ்வில் பங்கேற்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலையினை ஆளுநர் மாளிகை வளாகத்தில் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன், மாநில ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் கலந்துகொண்டனர். ஏற்கனவே ஆளுநர் மாளிகை வளாகத்தில் தமிழ் மொழிக்காக பாடுபட்டவர்களுக்கும், இந்திய ஒருமைப்பாட்டிற்காக பாடுபட்டவர்களுக்கும் சிலைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. அதன் அடிப்படையில் திருவள்ளுவர், ஔவையார், பாரதியார், சர்தார் வல்லப்பாய் படேல், விவேகானந்தர் போன்ற தலைவர்களுக்கு ஆளுநர் மாளிகை வளாகத்தில் சிலைகள் வைக்கப்பட்டிருக்கின்றன.

Related Stories: