ஜெ. நினைவு தினத்தில் மன்னார்குடி, பவானியில் ஓபிஎஸ், இபிஎஸ் அணியினர் மோதல்

மன்னார்குடி: ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தெற்கு வீதியில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்த அதிமுகவை சேர்ந்த ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் அமமுக சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி தலைவர்கள் சிலை அருகே அதிமுக இபிஎஸ் அணி சார்பில் நினைவுதின பேனர் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று ஊர்வலமாக வந்த இபிஎஸ் அணியினர், ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.  ஓபிஎஸ் அணியினர் ஊர்வலமாக வந்தனர்.

அப்போது, சிலைக்கு மாலை அணிவிப்பதற்கு இடையூறாக இருப்பதால் இபிஎஸ் அணியினர் வைத்திருந்த பிளக்ஸ் பேனரை அகற்றுமாறு கூறினர். இதற்கு இபிஎஸ் அணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால்மோதல் ஏற்படும் சூழலும் உருவானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். அப்போது இபிஎஸ் அணியினர், அனுமதி இன்றி வைத்துள்ள இரண்டு பிளக்ஸ் பேனரை அகற்றும்படி ஓபிஎஸ் அணியினர் முறையிட்டனர். இதையடுத்து பேனரை உடனடியாக அகற்றுமாறு இபிஎஸ் அணியினருக்கு போலீசார் அறிவுறுத்தினர். இதனை இபிஎஸ் அணியினர் ஏற்க மறுத்தனர். இதனால் இபிஎஸ் அணியினர் மற்றும் போலீசார் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசாரின் சமாதானம் செய்ததால் கலைந்து சென்றனர்.

பவானி:  ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம், பவானி நகர அதிமுக சார்பில் அந்தியூர்-மேட்டூர் பிரிவில் ஒருவழிப்பாதை பகுதியில் ஜெயலலிதாவின் படம் அலங்கரித்து வைக்கப்பட்டது. அங்கு, நகர அதிமுக சார்பில் நகர செயலாளர் சீனிவாசன் உள்பட நிர்வாகிகள் திரண்டனர். அப்போது, அங்கு முன்னாள் அதிமுக நகர செயலாளர் கிருஷ்ணராஜ், அவரது மனைவியும் கவுன்சிலருமான தங்கமணி, வார்டு செயலாளர் மகாதேவன் மற்றும் நிர்வாகிகள் வந்தனர். ஒரே இடத்தில் இரண்டு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

Related Stories: