உலக கோப்பை கால்பந்து செனகல் அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து

தோஹா: செனகல் அணியுடனான ‘ரவுண்டு ஆப் 16’ ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்ற இங்கிலாந்து உலக கோப்பை காலிறுதிக்கு முன்னேறியது. லீக் சுற்றின் பி பிரிவில் முதலிடம் பிடித்த ஐரோப்பிய சாம்பியன் இங்கிலாந்து (5வது ரேஙக்) அணியும், ஏ பிரிவில் 2வது இடம் பிடித்த ஆப்ரிக்க சாம்பியன் செனகல் (18வது ரேங்க்) அணியும் காலிறுதி வாய்ப்புக்காக நேற்று அதிகாலை வரிந்துகட்டின. ஆட்டத்தின் 28வது நிமிடத்தில் செனகல் கேப்டன் காலிடோ தட்டித் தந்த பந்தை இஸ்மில்லா சாரர் கோலாக்க முயன்றார்.  அது இங்கிலாந்து வீரர் ஹாரி மகூயர் மீது பட்டு வெளியேறியது.

அதற்காக கார்னர் வாய்ப்பு கேட்ட செனகல் வீரர்களை நடுவர் கவனிக்கவில்லை. இதை பயன்படுத்தி கூடுதல் வேகம் காட்டிய இங்கிலாந்து, 38வது நிமிடத்தில்  ஜூடோ பெல்லிங்ஹாம் கடத்தித் தந்த பந்தை ஜார்டன்  ஆண்டர்சன் அபாரமாக கோல் அடிக்க முன்னிலை பெற்றது. அதனை தொடர்ந்து, முதல் பாதி முடிவில்  வழங்கப்பட்ட கூடுதல்  நேரத்தில்  கேப்டன் ஹாரி கேன்  ஒரு கோல் போட்டார். நடப்பு தொடரில் இது அவரது முதல் கோல் என்பது குறிப்பிடத்தக்கது. லீக் சுற்றில் இங்கிலாந்து 9 கோல் அடித்திருந்தாலும் அதில் அவரது பங்களிப்பு பூஜ்ஜியமாகவே இருந்தது.

2வது பாதியிலும் இங்கிலாந்து  ஆதிக்கம் செலுத்தியது. அதன் பலனாக 57வது நிமிடத்தில் புகாயோ சாகா  கோலடித்து அசத்தினார். பதில் கோல் அடிக்க செனகல் மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. அதில் எரிச்சலான செனகல் கேப்டன் காலிடோ, ஆட்டத்தின் 78வது நிமிடத்தில் இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேனை முரட்டுத்தனமாக இடித்து தள்ளினார். அதனால் நடுவரால் எச்சரிக்கை செய்யப்பட்டு  மஞ்சள் அட்டை பெற்றார். ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 3-0 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்குள் உற்சாகமாக நுழைந்தது. சனிக்கிழமை நள்ளிரவு நடைபெறும் காலிறுதியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணியின் சவாலை இங்கிலாந்து எதிர்கொள்கிறது.

Related Stories: