வரத்து குறைவால் ஓசூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு-விவசாயிகள் மகிழ்ச்சி

ஓசூர் : பனிப்பொழிவால் சாகுபடி குறைந்ததால், ஓசூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல சீதோஷ்ண நிலை காணப்படுவதால், சாமந்தி, ரோஜா, பட்டர் ரோஸ், மேரிகோல்டு உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டு உள்ளன. இங்கு விளையும் பூக்கள், ஓசூர் மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர் அங்கிருந்து பெங்களூரு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக மழையால் ஓசூர் மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து குறைந்தது.

 இதனால்  ஒரு கிலோ சாமந்தி ₹20 முதல் 30க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று வரத்து குறைந்த நிலையில், ஒரு கிலோ சாமந்தி ₹100க்கு விற்பனை செய்யப்பட்டது.

 அதேபோல், கடந்த வாரம் பட்டன் ரோஸ் கிலோ ₹10 முதல் 20க்கு விற்ற நிலையில், நேற்று ₹140-க்கு விற்பனை செய்யப்பட்டது. மல்லிகை ₹1,000-க்கும், கனகாம்பரம் ₹800 முதல் 1,000க்கும் விற்கப்பட்டது. ஓசூர் பகுதியில் தற்போது கடும் பனிப்பொழிவு காரணமாக, சாகுபடி குறைந்து மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து சரிந்துள்ளது. இதனால் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பூக்களின் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: