சீத்தஞ்சேரி கூட்டுச் சாலையில் வெயிலின் தாக்கத்தில் மரங்கள் எரிந்து சேதம்

திருவள்ளூர்: சீத்தஞ்சேரி கூட்டுச்சாலையில் நேற்று வெயிலின் தாக்கம் அதிகரித்ததில் ஏற்பட்ட காட்டுத் தீயில் அங்கிருந்த அனைத்து மரங்களும் எரிந்து சேதமாகிவிட்டன. இதுகுறித்து தகவலறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக 100 டிகிரிக்கு மேலாக சுட்டெரிக்கும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதற்கே அச்சப்படுகின்றனர். இந்த வெயிலின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குளிர்பானங்கள் குடித்தும், நீச்சல்குளம் உள்பட பல்வேறு நீர்நிலைகளில் குளித்து உடல் சூட்டை தணித்து வருகின்றனர்.

மேலும், திருவள்ளூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு வனப்பகுதிகளில் உள்ள மரங்களும் வெயிலின் தாக்கத்தினால் இலைகள் கருகிய நிலையில் கிளைகளுடன் பரிதாபமாக காட்சியளித்து வருகின்றன. இதுதவிர, வனப்பகுதியில் சுற்றி திரியும் புள்ளிமான் உள்பட பல்வேறு விலங்குகளும் தண்ணீரை தேடி கிராமப் பகுதிகளுக்கு ஊடுருவி வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

இதேபோல், திருவள்ளூர் அருகே சீத்தஞ்சேரி கூட்டுச்சாலையில் கடந்த சில நாட்களாக மக்களை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் அங்குள்ள வனப்பகுதி, வருவாய்துறை நிலங்கள் மற்றும் தனியார் தோட்டங்களில் உள்ள செடி-கொடிகள் மற்றும் மரங்கள் காய்ந்து கிடக்கின்றன. இந்நிலையில், சீத்தஞ்சேரி கூட்டுச்சாலையில் உள்ள வனப்பகுதி மற்றும் வருவாய்துறை நிலங்களில் காய்ந்து கிடந்த மரங்கள் நேற்று மதியம் வெயிலின் உக்கிரத்தால் திடீரென தீப்பிடித்து, மளமளவென காட்டுத் தீ போல் பரவியது. இதனால் அப்பகுதி முழுவதிலும் உள்ள காய்ந்த மரங்கள் கொழுந்துவிட்டு எரிந்து சேதமாகின.

இதை பார்த்ததும் அப்பகுதி கிராம மக்கள், மரங்களில் பரவிய தீயை தண்ணீரை ஊற்றி அணைக்க முயற்சித்தனர். எனினும், அவர்களால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதுகுறித்து தகவலறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி, மரங்களில் பரவியிருந்த காட்டுத் தீயை முற்றிலும் அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் சீத்தஞ்சேரி கூட்டுச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பரபரப்பு நிலவியது.

The post சீத்தஞ்சேரி கூட்டுச் சாலையில் வெயிலின் தாக்கத்தில் மரங்கள் எரிந்து சேதம் appeared first on Dinakaran.

Related Stories: