ஈரான் அரசு பணிந்தது கலாச்சார காவல் பிரிவு கலைப்பு: ஹிஜாப்பை எதிர்த்து போராடிய பெண்களுக்கு வெற்றி

தெஹ்ரான்: கலாச்சார காவல் பிரிவு கலைக்கப்படும் என ஈரான் அரசு அறிவித்துள்ளது. இது இரண்டு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் ஹிஜாப் எதிரான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது. ஈரானில்  9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை கண்காணிக்க ‘காஸ்த் எர்ஷாத்’ என்ற  கலாச்சார சிறப்பு காவல் பிரிவு கடந்த 2006 முதல் செயல்பட்டு வருகிறது. இந்த போலீசார் பொது இடங்களில் ரோந்து சுற்றி கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

இந்தநிலையில் கடந்த செப்டம்பர் 13ம் தேதி  தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினர் வீட்டுக்கு குடும்பத்தினரோடு சென்று கொண்டிருந்த மாஷா அமினி என்ற 21 வயது இளம் பெண்ணை கலாச்சார போலீசார் சுற்றி வளைத்தனர். அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று கூறி கைது செய்து வேனில் ஏற்றினர். அப்போது, போலீசார் தாக்கியதில், காயமடைந்த மாஷா அமினி 4 நாட்களுக்கு பிறகு உயிரிழந்தார்.

இளம்பெண்ணின் மரணத்தை தொடர்ந்து ஈரானில் பெரும் போராட்டம் வெடித்தது.  ஹிஜாப்பை கழட்டி எறிந்த பெண்கள், இது தங்களின் சுதந்திரம் என கூறி போராடி வருகின்றனர். அவர்களது போராட்டத்துக்கு உலகெங்கும் ஆதரவு பெருகியது. போராட்டத்தை ஒடுக்க முயற்சித்த ஈரான் போலீசார், இதுவரை 14 ஆயிரத்திற்கும் அதிகமானோரை கைது செய்தனர். ஈரானின் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்ததாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

தொடர் போராட்டத்தை முறியடிக்க முடியாமல் திகைத்து போய் உள்ள ஈரான் அரசு, இந்த விவகாரத்தில் நேற்று பணிந்தது.  கலாச்சார சிறப்பு காவல் பிரிவு கலைக்கப்படுவதாக ஈரான் அட்டர்னி ஜெனரல் முகமது ஜாபர் மொண்டசெரி அறிவித்துள்ளார். ஈரானின் இந்த அறிவிப்பு, கடந்த இரண்டரை மாதத்துக்கு மேலாக ஹிஜாபுக்கு எதிராக போராடி வரும் ஈரான் பெண்களுக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.

Related Stories: