ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சென்னை மாகாணம் வெளியிட்ட பழங்கால தங்க காசுகள் கண்டெடுப்பு

திருமலை: ஆந்திராவில் விவசாய நிலத்தில் பள்ளம் தோண்டியபோது பழங்கால தங்க காசுகளுடன் கூடிய மண் பானை கண்டெடுக்கப்பட்டது. ஆந்திர மாநிலம், ஏளூர் மாவட்டத்தில் உள்ள கொய்யாலகூடம் அடுத்த ஜங்காரெட்டிகுடம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சத்தியநாராயணா, தேஜாஸ்ரீ. இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலம் ஏடுவடபாலம் கிராமத்தில் உள்ளது.

கடந்த மாதம் 29ம் தேதி வயலில் கூலித்தொழிலாளர்களை கொண்டு சொட்டு நீர்பாசனத்திற்காக குழாய் பதிக்க பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது,  ஒரு இடத்தில் மண் பானை இருப்பதை பார்த்த தொழிலாளர்கள் அதனை திறந்து பார்த்துள்ளனர். அதில்,  தங்க காசுகள் இருப்பது தெரியவந்தது. 18 தங்க காசுகள் இருப்பதை பார்த்து மகிழ்ச்சியடைந்தனர். இதனை பார்த்த தேஜா அதனை கடந்த 1ம் தேதி தாசில்தார் நாகமணியிடம் ஒப்படைத்தார்.

இதுகுறித்து தொல்லியல் மற்றும் அருங்காட்சியகங்கள் உதவி இயக்குநர்(ராஜமகேந்திராவரம்) திம்மராஜூ கூறுகையில், ‘விவசாய நிலத்தில் கிடைத்த நாணயங்கள் கி.பி.1740 முதல் 1805 காலக்கட்டத்தில் ஆங்கிலேயர்களின் கிழக்கு இந்திய கம்பெனி மூலம் சென்னை மாகாணத்தால் அச்சிடப்பட்ட நாணயங்கள் என தெரியவந்துள்ளது. இவை ‘மூன்று பகடாள நாணயங்கள்’ என்று அழைக்கப்பட்டன. நாணயங்களில் வெங்கடேஸ்வரா சுவாமி, பத்மாவதி தாயார் உருவம் பதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதன் வரலாற்றை கண்டறிய விரிவான ஆய்வு தேவை’ என்றார்.

Related Stories: