நிலக்கல்-பம்பை இடையே பயணிக்க சபரிமலை ஆன்லைன் முன்பதிவின் போது பஸ் டிக்கெட் பெறும் வசதி: கேரள அரசுக்கு விளக்கம் கேட்டு ஐகோர்ட் உத்தரவு

திருவனந்தபுரம்: சபரிமலை  தரிசனத்திற்காக பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்யும்போது,  நிலக்கல்-பம்பை இடையிலான பஸ் பயணத்திற்கான டிக்கெட் எடுக்க வசதி ஏற்படுத்த முடியுமா என்று விளக்கமளிக்க கேரள அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலையில் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு வசதி கடந்த 10  வருடங்களுக்கு முன் அமல்படுத்தப்பட்டது.

இதன் மூலம் பக்தர்கள் காலதாமதமின்றி உடனுக்குடன் தரிசனம் செய்து வருகின்றனர்.  சபரிமலை செல்லும் பக்தர்கள் வாகனங்களை   நிலக்கல்லில் நிறுத்திவிட்டு கேரளஅரசு பஸ்சில் பம்பைக்கு செல்ல வேண்டும். இந்த பஸ்களில் எப்போதும் கூட்டம் மிக அதிகமாக  இருக்கும்.  பெரும் சிரமப்பட்டு பஸ்சில்  பயணம் செய்த ஒரு பக்தர் கேரள உயர் நீதிமன்றத்திற்கு சமீபத்தில் ஒரு கடிதம்  அனுப்பினார்.

அதில், நிலக்கல்-பம்பை இடையே பஸ்சில் இருக்கை கிடைப்பது  மிகவும் சிரமமாக இருப்பதால், தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு  செய்யும்போதே இந்த பஸ்சில் டிக்கெட் எடுக்க வசதி ஏற்படுத்த வேண்டும் என்று  குறிப்பிட்டிருந்தார். பக்தரின் இந்தக் கடிதத்தை நீதிபதிகள் அனில் கே.  நரேந்திரன் மற்றும் அஜித்குமார் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச்  விசாரித்தது. பக்தரின் கோரிக்கைக்கு ஏற்ப தரிசனத்திற்கு ஆன்லைனில்  முன்பதிவு செய் யும்போதே நிலக்கல்- பம்பை பஸ்சிலும் டிக்கெட் எடுக்க வசதி  ஏற்படுத்த முடியுமா என்பது குறித்து விளக்கம் அளிக்க கேரள அரசுக்கு டிவிஷன்  பெஞ்ச் உத்தரவிட்டது.

நெய்யபிஷேகத்திற்கு பலமணி நேரம் காத்திருப்பு:

சபரிமலையில்  பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றுமுன்தினம் வரை 10  லட்சத்திற்கு அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கடந்த 1ம் தேதி முதல்  நேற்று வரை 3 நாட்களில் மட்டும் 2.10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள்  தரிசனம் செய்தனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்றும் சபரிமலையில்  கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. தரிசனத்திற்காக நேற்று காலை வரை 67 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் முன்பதிவு செய்திருந்தனர். நேற்று அதிகாலை 3 மணிக்கு நடை திறந்த போது பக்தர்கள்  நீண்ட வரிசையில்  காத்திருந்தனர். நெய்யபிஷேகம் செய்வதற்கும் பக்தர்கள் பல மணி நேரம்  வரிசையில் காத்திருந்தனர்.

Related Stories: