நாடாளுமன்ற தேர்தலில் பாஜ தலைமையில்தான் அதிமுக போட்டியிடும்: ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் பேட்டி

புதுக்கோட்டை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜ தலைமையில்தான் அதிமுக போட்டியிடும் என்று ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் தெரிவித்தார். புதுக்கோட்டையில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் நேற்று அளித்த பேட்டி: அதிமுக கட்சி மற்றும் ஆட்சி தமிழகத்தில் நூறாண்டு காலம் இருக்கும் என்று ஜெயலலிதா கூறினார். அதை நோக்கி அதிமுக பயணிக்கும்.

அதிமுக விவகாரத்தில் பாஜ தலையிடுவதாக தெரியவில்லை. அனைவரும் ஒன்றாக இணைவோம். ஓபிஎஸ், சசிகலா, டிடிவி, இபிஎஸ், அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற பண்ருட்டியார், சைதை துரைசாமி, ஏ.சி.சண்முகம் என அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம். ஒன்றிணைய மாட்டோம் என சில காரணங்களால் இபிஎஸ் தொடர்ந்து கூறி வருகிறார். ஒற்றுமைக்கு இபிஎஸ் ஒத்துவரவில்லை என்றால் அவர் தனிமைப்படுத்தப்படுவார். அது கூடிய விரைவில் நடக்கும்.

கோவை செல்வராஜ்க்கு, தலைமை கழகத்தில் பதவி கொடுப்பதாக இருந்தோம். அவர் விலகுவது வருத்தமாக இருக்கிறது. நிச்சயமாக அவரை அழைத்து பேசுவோம். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தான். அவர் தலைமையில் இரட்டை இலை சின்னம் கட்டாயம் எங்களுக்கு தான் கிடைக்கும். நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் அதிமுக அங்கம் வகிக்கும். அதன் தலைமை என்பது பாஜதான். பாஜ தலைமையில் தான் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக போட்டியிடும். கூடிய விரைவில் பொதுக்குழு இருக்கும். இவ்வாறு வைத்திலிங்கம் கூறினார்.

Related Stories: