அடுத்த ஆண்டு பிப்ரவரியில் காங்கிரசின் தேசிய மாநாடு ராய்ப்பூரில் நடத்த திட்டம்: வழிகாட்டுதல் குழு கூட்டத்தில் அறிவிப்பு

புதுடெல்லி: அடுத்த ஆண்டு பிப்ரவரியில் சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் காங்கிரசின் பிரமாண்ட தேசிய மாநாடு நடத்தப்படும் என வழிகாட்டுதல் குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாடு குறித்த முடிவுகளை எடுப்பதற்கான அக்கட்சியின் வழிகாட்டு குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது.

இதில் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர்கள் கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், மூத்த தலைவர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நடைபயணத்தில் பங்கேற்றுள்ளதால் ராகுல் காந்தி கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

இதில், கட்சியின் தேசிய மாநாட்டை சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. இந்த மாநாட்டில் நாடு முழுவதும் இருந்தும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பார்கள். இது குறித்து பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், ‘‘தேசிய மாநாடு 3 நாட்கள் நடைபெறும். இதில் கட்சியின் செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும். அதைத் தொடர்ந்து பிரமாண்ட பொதுக்கூட்டமும் நடத்தப்படும்.

இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் தொடர்ச்சியாக ஜனவரி 26ம் தேதி முதல் 2 மாதத்திற்கு ‘கைகோர்த்து பிரசாரம் செய்யுங்கள்’ என்ற பிரமாண்ட பிரசாரம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் நாடு முழுவதும் கிராம பஞ்சாயத்துகளில் நடைபயணம் மேற்கொள்ளப்படும். இதையொட்டி இந்திய ஒற்றுமை நடை பயணத்தை வரும் 26ம் தேதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

ஒதுங்கிவிடுங்கள்

வழிகாட்டுதல் குழு கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, ‘‘காங்கிரஸ் கட்சி வலுவாகவும், பொறுப்பாகவும், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்பட்டால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற்று நாட்டு மக்களுக்கு சேவை செய்ய முடியும். எனவே கட்சியில் பொறுப்பில் உள்ள நபர்கள் தங்கள் கடமையைச் செய்ய வேண்டும். முடியாதவர்கள் அடுத்தவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கிக் கொள்ள வேண்டும்’’ என்றார்.

பிரியங்கா தலைமையில் பெண்கள் பேரணி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வரும் நிலையில், வரும் ஜனவரி 26ம் தேதி முதல் மார்ச் 26ம் தேதி வரை பிரியங்கா காந்தி தலைமையில் மகளிர் காங்கிரஸ் பேரணி நடத்தப்படுவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்று தெரிவித்தார். அனைத்து மாநிலங்களிலும் மகளிர் பேரணி நடத்தப்படும் என்று அவர் கூறி உள்ளார்.

Related Stories: