டெல்லி மாநகராட்சியை பிடிப்பது யார்?: வாக்குப்பதிவு சுறுசுறு; 7ம் தேதி வாக்கு எண்ணிக்கை

புதுடெல்லி: தலைநகர் டெல்லி மாநகராட்சிக்கான உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். டெல்லி மாநகராட்சிக்கு உட்பட 250 வார்டுகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டதால், இந்த தேர்தலில் 1,349 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். சுமார் 1.45 கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதால், தலைநகர் முழுவதும் மொத்தம் 13,638 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

பதற்றமான வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. ‘பிங்க் பூத்’ எனப்படும் சிறப்பு வாக்குச் சாவடிகளில் பெண் ஊழியர்கள் மட்டுமே தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த பூத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்கான அறை வசதியும், குழந்தைகளுடன் வரும் பெண்களுக்கான இடவசதியும் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் 68 மாதிரி வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தன.

டெல்லி மாநகராட்சி பாஜக வசம் உள்ள நிலையில், மீண்டும் மாநகராட்சியை கைப்பற்ற அக்கட்சி தீவிர பிரசாரம் மேற்கொண்டது. அதேநேரம் ஆளும் ஆம்ஆத்மியும், காங்கிரஸ் கட்சியும் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்தன. இன்று பதிவான வாக்குகள் வரும் 7ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

Related Stories: