சீனா உளவு பார்க்கக்கூடிய டிக்டாக் செயலியால் அமெரிக்காவுக்கு ஆபத்து: எப்பிஐ கவலை

வாஷிங்டன்: டிக்டாக் மூலம் அமெரிக்கர்களை சீன அரசு உளவு பார்க்கக் கூடிய வாய்ப்பிருப்பதால், அந்த செயலியால் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவி வருவதாக எப்பிஐ இயக்குநர் கிறிஸ் ரே கவலை தெரிவித்துள்ளார். சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது டிக்டாக் செயலி. இந்த செயலி, தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி கடந்த 2020ம் ஆண்டு இந்திய அரசு தடை விதித்தது. ஆனாலும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் டிக்டாக் வெற்றிகரமாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில், இந்தியாவை போல் தற்போது அமெரிக்காவும் டிக்டாக்கால் பாதுகாப்பு அச்சுறுத்தல் கவலை கொள்ளத் தொடங்கி உள்ளது.

இது தொடர்பாக மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்பிஐயின் இயக்குநர் கிறிஸ் ரே, ‘‘டிக்டாக் செயலி முழுக்க முழுக்க சீன அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு நிறுவனமாகும். அதன் செயல்பாட்டை சீன அரசு கட்டுப்படுத்துகிறது. எனவே, டிக்டாக்கின் உள்ளடக்கங்களை கையாளவும், சீன அரசு விரும்பினால் அதன் செயல்பாடுகளில் ஆதிக்கம் செலுத்தவும் முடியும். மேலும், அமெரிக்கர்களின் தகவல்களை பெறும் டிக்டாக் அவற்றை சீன அரசுடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்புண்டு. இத்தகவல் மூலம் அமெரிக்கர்களை சீன அரசால் உளவு பார்க்க முடியும். எனவே இது மிகப்பெரிய தேசப் பாதுகாப்பு அச்சுறுத்தலாக கவலை அளிக்கிறது’’ என்றார். எனவே அமெரிக்காவிலும் விரைவில் டிக்டாக்கிற்கு தடை விதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

* அமெரிக்கர்களின் தகவல்களை சீன அரசுடன் பகிர்ந்து கொள்ள மாட்டோம், அமெரிக்க சட்டங்களுக்கு கட்டுப்படுவோம் என டிக்டாக் கூறி வருகிறது.

* கடந்த 2020ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப், டிக்டாக்கை தடை செய்யவும், ஏதேனும் ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு விற்கவும் அழுத்தம் கொடுத்தார்.

Related Stories: