நடிகை காயத்ரி ரகுராமிடம் இருந்து பறிக்கப்பட்ட பதவிக்கு புதிய தலைவர் நியமனம்: அண்ணாமலை அதிரடி அறிவிப்பு

சென்னை: நடிகை காயத்ரி ரகுராமிடமிருந்து பறிக்கப்பட்ட பதவிக்கு இசை அமைப்பாளர் தீனாவை நியமித்து பாஜ தலைவர் அண்ணாமலை அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழக பாஜவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் கடந்த 22ம் தேதி அதிரடியாக நீக்கப்பட்டார். சர்ச்சைக்குரிய வகையில் சமூகவலைத்தளம் பதிவு, ஆடியோ பேச்சு விவகாரம், அண்ணாமலைக்கு எதிரான பேச்சால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அப்போது பரபரப்பு தகவல் வெளியானது. கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 மாதம் காலத்திற்கு நீக்கப்படுகிறார்.

கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எந்தவித தொடர்பும் வைத்து கொள்ள வேண்டாம் என்று அண்ணாமலை அதிரடியாக அறிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை காயத்ரி ரகுராம், “நன்றி அண்ணாமலை ஜி. 6 மாதங்களுக்கு கட்சியிலிருந்து என்னை நீக்கியுள்ளதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் என்னை நேசிப்பவர்கள் என்னிடம் பேசுவார்கள், அதை யாராலும் தடுக்க முடியாது. இடைநீக்கம் செய்தாலும் தேசத்திற்காக உழைப்பேன்” என்று பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் காயத்ரி ரகுராமிடமிருந்து பறிக்கப்பட்ட பதவிக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழக பாஜக வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இசை அமைப்பாளர் தீனா, மாநில துணை தலைவராக ஆனந்தன் அய்யாசாமி நியமனம் செய்யப்படுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: