பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் 55 லட்சம் விவசாயிகள்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் இதுவரை 54.63 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு  செய்யப்பட்டு 33 லட்சம் ஏக்கர் பரப்பளவு பயிர்கள் காப்பீடு  செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் நடப்பு 2022-2023ம் ஆண்டில், சிறப்பு மற்றும் குளிர்கால (ராபி) பருவங்களில், இதுவரை 54.63 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு 33 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பல்வேறு பயிர்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளன. நடப்பாண்டில், சிறப்பு மற்றும் குளிர்கால (ராபி) பருவங்களில் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை காப்பீடு செய்ய டிசம்பர் 15ம் தேதி முதல் 31ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பயிர் காப்பீட்டு கட்டண தொகையில், பெரும்பாலான பங்கு தொகை மாநில, ஒன்றிய அரசுகள் செலுத்திவிடும் என்பதால், விவசாயிகள் 1.5 சதவீதம் மட்டும் செலுத்தினால் போதுமானது. எனவே, எதிர்பாராமல் இயற்கை பேரிடர், பூச்சிநோய் தாக்குதலால் மகசூல் இழப்பு ஏற்பட்டால், விவசாயிகளை பாதுகாப்பதற்காக, ரூ.2,339 கோடி நிதி ஒதுக்கீட்டில் அரசு செயல்படுத்தி வரும் பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் அருகில் உள்ள பொதுச்சேவை மையங்களிலோ தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலோ உரிய காப்பீட்டு கட்டணத்தை செலுத்தி தங்களது பயிர்களை காப்பீடு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: