ஆதி திராவிட, பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20% மானியம்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்

சென்னை: ஆதி திராவிட, பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம் வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வேளாண் பெருமக்களின் நலனுக்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக வேளாண் நிதிநிலை அறிக்கையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளின் நலனுக்காக ஒவ்வொரு திட்டத்திலும் சிறப்புச் சலுகை வழங்கப்பட்டு வருகிறது.

வேளாண் நிதிநிலை அறிக்கை அறிவிப்பு

“ஆதி திராவிடர், பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவிகித மானியம் எனும் தலைப்பில், “இவ்வரசினால் செயல்படுத்தப்படும் உயர்மதிப்பு வேளாண் திட்டங்களில், ஆதிதிராவிட, பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு அவர்களின் பங்குத்தொகையினை குறைத்து உதவிடும் வகையில், நடைமுறையில் உள்ள மானியத்துடன், 20 சதவீத கூடுதல் மானியம் மாநில அரசு நிதியிலிருந்து வழங்கப்படும். இதற்கென 2022-23ஆம் ஆண்டில் ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்” என்று அறிவிக்கப்பட்டது.

கூடுதல் மானியம் வழங்கப்படும் திட்டங்கள்

அ) ஒருங்கிணைந்த பண்ணையம்:

பயிர் சாகுபடியுடன், கறவை மாடு உள்ளிட்ட பல்வேறு வேளாண் சார்ந்த தொழில்களையும் ஒருங்கிணைத்து மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு 50 சதவிகித மானியம் வழங்கப்படுகிறது. ஆதி திராவிட, பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு, கூடுதலாக 20 சதவிகிதம் அதாவது ரூ.50,000 மானியத்துடன் கூடுதலாக ரூ.20,000/- மொத்தம் ரூபாய் 70,000/- மானியமாக வழங்கப்படும். கூடுதலாக வழங்கப்படும் மானியத்திற்காக மாநில அரசு ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.

ஆ) பசுமைக்குடில் / நிழல்வலைக்குடில்

வெள்ளரி, குடை மிளகாய், கார்னேஷன் கொய்மலர், ரோஜா கொய்மலர் போன்ற பயிர்களில் பசுமைக்குடில் (Polygreen House) / நிழல்வலைக்குடில் (Shadenet) அமைப்பதற்கு தேசிய தோட்டக்கலை இயக்கம் மற்றும் மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், அனைத்து விவசாயிகளுக்கும் 50 சதவிகித மானியம் வழங்கப்படுகிறது. ஆதி திராவிட, பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு, கூடுதலாக 20 சதவித மானியம் ஆக மொத்தம் 70 சதவிகித மானியம் வழங்கப்படும். கூடுதலாக வழங்கப்படும் மானியத்திற்காக மாநில அரசு ரூ.0.70 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.

இ) வேளாண் பொறியியல் துறை சார்ந்த திட்டங்கள்: கீழ்க்காணும் திட்டங்களுக்கு ஆதி திராவிட, பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு, கூடுதலாக 20 சதவிகிதம் ஆக மொத்தம் 70 சதவிகித மானியம் வழங்குவதற்காக மாநில அரசு ரூ.2.80 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.

1) வேளாண் இயந்திரமயமாக்கல்   

வேளாண் இயந்திரமயமாக்கும் துணை இயக்கத்தின் கீழ் ஆதி திராவிட, பழங்குடியின வகுப்பைச் சார்ந்த தனிப்பட்ட விவசாயிகளுக்கு டிராக்டர்கள், மினி டிராக்டர்கள், பவர்டில்லர்கள் உள்ளிட்ட பல்வேறு இயந்திரங்கள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. ஆதி திராவிட பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம் ஆக மொத்தம் 70 சதவிகித மானியம் வழங்கப்படும்.

2) சூரிய கூடார உலர்த்திகள்

அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாய குழுக்களுக்கு 40 சதவீத மானியத்தில் சூரிய கூடார உலர்த்திகள் அமைத்து தரப்படுகிறது. மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ள இத்திட்டத்தின் கீழ் ஆதி திராவிட பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம் ஆக மொத்தம் 60 சதவிகித மானியம் வழங்கப்படும்.

3) மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள்

எண்ணெய் செக்கு, சிறிய பருப்பு உடைக்கும் இயந்திரம், மிளகாய் பொடியாக்கும் இயந்திரம் போன்ற மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் வேளாண் இயந்திரமயமாக்கும் துணை இயக்கத்தின் கீழ் 40 சதவீத மானியம் அளிக்கப்படுகிறது.  மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ள இத்திட்டத்தின் கீழ் ஆதி திராவிட பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம் ஆக மொத்தம் 60 சதவிகித மானியம் வழங்கப்படும்.

4) வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டும் இயந்திர சேவை மையம்

மொத்தம் ரூ.10 இலட்சம் மதிப்பில் மதிப்புக் கூட்டும் இயந்திர சேவை மையங்கள் அமைத்திட அனைத்துப் பிரிவைச் சார்ந்த விவசாய குழுக்களுக்கு, 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு அறிமுகப்படுத்தியுள்ள இத்திட்டத்தின் கீழ் ஆதி திராவிட பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறு,குறு விவசாய குழுக்களுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம் ஆக மொத்தம் 70 சதவிகித மானியம் வழங்கப்படும்.

5) சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டம்

முதலமைச்சரின் சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ், அனைத்து விவசாயிகளுக்கும் 70 சதவீத மானியத்தில் பம்பு செட்டுகள் நிறுவப்பட்டு வருகிறது. ஆதி திராவிட பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளாக இருந்தால், கூடுதலாக 20 சதவீத மானியம் ஆக மொத்தம் 90 சதவிகித மானியம் வழங்கப்படும்.

தேவையான ஆவணங்கள்: வருவாய்த்துறையினால் வழங்கப்படும் ஆதிதிராவிட, பழங்குடியினருக்கான சான்றிதழும், சிறு, குறு விவசாயிகள் என்ற சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும்.      

இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் ?

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலமாகவோ, அல்லது அல்லது இணையதளம் மூலமாகவோ தேவையான விவரங்களை அளித்து முன்பதிவு செய்து கொள்ளலாம். எனவே, ஆதிதிராவிட, பழங்குடியின சிறு, குறு விவசாயிகளின் நலனுக்காக அதிக மதிப்புள்ள திட்டங்களில் தமிழக அரசினால் வழங்கப்படும்  கூடுதல் 20 சதவீத மானியத்தினை பெற்று பயனடையுமாறு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.   

Related Stories: