ஒரத்தநாடு அருகே பட்டியல் இனத்தவர்களுக்கு பொருட்கள் இல்லை எனக் கூறுவதாகவும், இரட்டைகுவளை முறை பின்பற்றப்படுவதாகவும் புகார்: போலீசார் விசாரணை

தஞ்சாவூர்: ஒரத்தநாடு அருகே கிளாமங்கலம் பகுதியில் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்களுக்கு முடி திருத்தம் செய்யாமல், கடையை மூடிச் சென்ற வீரமுத்து என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அப்பகுதியில் இரட்டைகுவளை முறை பின்பற்றப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

ஒரத்தநாடு வட்டம் அருகே கிளாமங்கலம் கிராமத்தில் டீ கடைகளில் இரட்டைகுவளை முறை இருப்பதாகவும் சலூன் மற்றும் மளிகை கடைகளில் பட்டியலின மக்களிடம் தீண்டாமை கடைபிடிக்கப்படுவதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து கிராம அலுவலர் ஆய்வு நடத்தி இருதரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு தீண்டாமை மேலும் அதிகரித்திருப்பதாக பட்டியலின மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தங்களுக்கு பொருட்கள் தரக்கூடாது என்றும் முடிதிருத்தம் செய்யக்கூடாது என்றும் ஊரில் ஒரு சமூகத்தினர் கூறியிருப்பதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் மளிகைக்கடையில் பெட்ரோல் கேட்டதாகவும் அதனை விற்பதலில்லை என கூறியதை திரித்து இவ்வாறு பொய் புகார் கூறுவதாகவும் ஒருதரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.  

தீண்டாமை புகார் காரணமாக அந்த ஊர் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். சில தினங்களுக்கு முன்பு அந்த ஊரை சேர்ந்த பட்டியலின இளைஞருக்கு சலூன் கடையில் முடித்திருத்தம் செய்ய மறுப்பு தெரிவித்ததாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக பாப்பாநாடு காவல்துறையினர் விசாரணை நடத்தி சலூன்கடை நடத்தி வரும் வீரமுத்து என்பவரை கைது செய்தனர்.

Related Stories: