திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளை அச்சுறுத்தும் பாழடைந்த கிணறு

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனையில் திறந்த நிலையில் இருக்கும் பாழடைந்த கிணறும், சேதமான குடிநீர் தொட்டியும் அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளை அச்சுறுத்தி வருகிறது. அவற்றை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். திருக்கழுக்குன்றத்தில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் நாள்தோறும் இப்பகுதியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெறுவதற்காக வந்து செல்கின்றனர். மேலும், பிரசவம் மற்றும் இதர நோய்களுக்கு உள்நோயாளியாகவும் பலர் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இங்கு வரும் நோயாளிகளின் பயன்பாட்டுக்காக, கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கிணறும், ஒரு குடிநீர் தொட்டியும் பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்த பிரமாண்ட கிணற்றின்மீது போடப்பட்ட இரும்பு மூடி முறையான பராமரிப்பின்றி சேதமாகி, கிணற்றுக்குள் விழுந்துவிட்டதாகவும், அங்கு குப்பை மற்றும் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு பாழடைந்து கிடப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இதன் அருகே குடிநீர் தொட்டி கட்டிடமும் சேதமடைந்து, எந்நேரத்திலும் இடிந்து விழும் அபாயநிலையில் உள்ளது. இதனால் அக்கிணற்று நீரை உபயோகப்படுத்த முடியாமல் மாசு படிந்து காணப்படுகிறது.

இதனால் மாசு படிந்த கிணற்று நீரைத்தான் நோயாளிகள் பயன்படுத்த வேண்டிய அவலநிலை நீடித்து வருகிறது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், அந்த கிணறு மற்றும் குடிநீர் தொட்டியை சீரமைப்பதில் அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே, இங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளின் நலன் கருத்தி, பாழடைந்த கிணறு மற்றும் குடிநீர் தொட்டியை இடித்து அகற்றிவிட்டு, அங்கு புதிதாக ஆழ்துளை கிணறு மற்றும் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து தருவதற்கு மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: