மாதவரம் மண்டலம், 25வது வார்டில் அரசு வழங்கிய குடியிருப்பு பகுதியை ஆக்கிரமிப்பாக அறிவித்து நோட்டீஸ்; சென்னை கலெக்டர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் முறையீடு

தண்டையார்பேட்டை:  சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலத்திற்கு உட்பட்ட 25வது வார்டு விநாயகபுரம் நேரு நகரில் சுமார் 40க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதில், சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வரூகின்றனர். கடந்த 21 வருடங்களுக்கு முன் மூலக்கடை பகுதியில் உள்ள சிம்சன் கம்பெனி நிலத்தை ஆக்கிரமித்து குடியிருந்து வந்ததாக அங்கிருந்த பொதுமக்களை அகற்றி பாதிக்கப்பட்ட 28 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு அப்போதைய மாவட்ட ஆட்சியர் மற்றும் சைதாப்பேட்டை வட்டாட்சியர் பரிந்துரையின் பேரில் வருவாய்த்துறை மூலமாக மாற்று இடம் அரசு வழங்கியது.

தற்போது, அந்த இடத்தில் பொதுமக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதில் மின்சாரம், குடிநீர், தார்சாலை போன்ற அடிப்படை வசதிகளையும்   ஏற்படுத்திக் கொடுத்தனர்.

இந்நிலையில், திடீரென கடந்த 21ம் தேதி அன்று பொதுப்பணி துறையினரால், இது அரசு இடம் ஆக்கிரமிப்பு எனக் கூறி நவ.30ம் தேதிக்குள் வீடுகளை காலி செய்ய  வேண்டும் என நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதன் காரணமாக, அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் மாதவரம் தாசில்தார் அலுவலகத்தில் ‘நாங்கள் ஆக்கிரமிப்பு செய்யவில்லை.

இது அரசு கொடுத்த இடம்’ எனக்கூறி காலக்கெடு முடிவடைய 2 நாட்களே உள்ளதால் அவர்கள் செய்வதறியாது திகைத்து திடீரென முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின், கோட்டாட்சியர் ரங்கராஜன், வட்டாட்சியர் நித்தியானந்தம் பொது மக்களின் மனுக்களை வாங்கி மறுபரிசீலனை செய்வதாகவும், இதுகுறித்து அரசுக்கு தெரிவிப்பதாகவும் கூறினார்கள்.

இந்நிலையில், காலக்கெடு முடிவடைய இன்னும் ஒருநாளே உள்ளதால் நேற்று முன்தினம் காலை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையீடு செய்ய 30 க்கும் மேற்பட்டோர் அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அதன்பின் கலெக்டரை சந்தித்து, இது சம்பந்தப்பட்ட ஆவணங்களை சமர்ப்பித்து குடியிருப்புவாசிகளை அப்புறப்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டனர். மேலும் பொதுமக்கள் கொடுத்த மனுக்களை பரிசீலனை செய்வதாக கலெக்டர் தெரிவித்தார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Related Stories: