ரிசர்வ் வங்கி அறிவிப்பு, சில்லரை டிஜிட்டல் கரன்சி 4 நகரத்தில் நாளை அறிமுகம்; சென்னையில் கிடையாது

மும்பை: மொத்த வர்த்தகத்தை தொடர்ந்து தற்போது சில்லரை வர்த்தகத்திற்கான டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி நாளை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. 4 நகரங்களில் சோதனை அடிப்படையில் சில்லரை டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்படுகிறது. இந்தியாவில் ரிசர்வ் வங்கி மூலம் டிஜிட்டல் கரன்சிகள் அறிமுகம் செய்யப்படும் என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பட்ஜெட்டில் அறிவித்தார். அதன்படி, மொத்த வர்த்தகத்திற்கான டிஜிட்டல் கரன்சி கடந்த 1ம் தேதி சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டது. பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் பரோடா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, எச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ., கோடக்மகேந்திரா உள்பட 9 வங்கிகள் மூலம் டிஜிட்டல் கரன்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த டிஜிட்டல் கரன்சியை நிதி நிறுவனங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். இதைத் தொடர்ந்து, சில்லரை வர்த்தகத்திற்கான டிஜிட்டல் கரன்சி நாளை அறிமுகம் செய்யப்படுவதாக ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்தது.

இந்த கரன்சியை பொதுமக்களும் பெற்று பயன்படுத்த முடியும். இதுவும் சோதனை அடிப்படையிலேயே அறிமுகம் செய்யப்படுகிறது. பாரத ஸ்டேட் வங்கி மற்றும் ஐசிஐசிஐ உள்ளிட்ட 4 வங்கிகள் டிஜிட்டல் கரன்சியின் சில்லரை வர்த்தகத்தில் பங்கேற்கின்றன. இது முதற்கட்டமாக மும்பை, டெல்லி, பெங்களூரு மற்றும் புவனேஸ்வர் ஆகிய 4 நகரங்களில் மட்டும் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த முயற்சி வெற்றி பெறும் பட்சத்தில் சென்னை உள்ளிட்ட பிற பெரு மற்றும் முக்கிய நகரங்களில் அறிமுகம் செய்யப்படும் என ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: