கோவை, மங்களூர் சம்பவங்களை தொடர்ந்து டிஜிபி சைலேந்திரபாபுவுடன் என்ஐஏ டிஜிபி தின்கர் குப்தா சந்திப்பு

சென்னை: கோவை, மங்களூர் சம்பவங்களைத் தொடர்ந்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவுடன். என்ஐஏ டிஜிபி தின்கர் குப்தா நேற்று மாலையில் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினர்.

பாகிஸ்தானில் இருந்து அரபிக்கடல் வழியாக ஆயுதம் மற்றும் போதைபொருட்கள் கடத்தியதாக இந்தியாவில் தடை ெசய்யப்பட்ட விடுதலைபுலிகள் இயக்கத்தின் உளவுபிரிவில் இருந்த நபர் உட்பட 6 பேரை கைது செய்தனர். மேலும் அந்த சம்பவத்தில் தொடர்பில் இருந்ததாக வளசரவாக்கத்தில் இருந்த இலங்கை தமிழர்கள் தங்கியிருந்த வீடுகளில் சோதனை ெசய்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதைப்போன்று நாடு முழுவதும் தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தலைமை அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்தி 45க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அந்த அமைப்புகளும் தடை செய்யப்பட்டது. மேலும் கோவை கார் வெடிப்பு மற்றும் கர்நாடகா மாநிலம், மங்களூரில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடிப்பில் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து தமிழகத்திலும் 8க்கும் மேற்பட்டோர் இரண்டு வழக்குகளிலும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவை, காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் தேசிய புலனாய்வு முகமையின் தலைமை இயக்குநர் தின்கர் குப்தா நேற்று மாலை நேரில் சந்தித்து வழக்கு தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் தமிழக ஏடிஜிபிக்கள் வெங்கட்ராமன்(தலைமையிடம்) டேவிட்சன் தேவாசீர்வாதம்(உளவுத்துறை), சங்கர்(நிர்வாகம்), உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு ஐஜி ஈஸ்வரமூர்த்தி, எஸ்பிக்கள் கண்ணம்மாள்(க்யூ பிரிவு), சரவணன்(உளவுப் பிரிவு), கார்த்திக்(உளவுப் பிரிவு), அருளரசு(சட்டம் ஒழுங்கு உதவி ஐஜி), மற்றும் என்ஐஏ உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கோவை வழக்கு விசாரணைக்கு தமிழக போலீசின் ஒத்துழைப்பு மற்றும் அலுவலகம், காவல்துறை அதிகாரிகள், வாகனங்கள் தேவை குறித்தும், என்ஐஏ வழக்குகளில் தமிழக காவல்துறை உதவிகளையும் கேட்டதாக கூட்டத்தில் கலந்து கொண்ட உயர்அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: