வருமான வரி பாக்கிக்காக முடக்கம் செய்யப்பட்ட வங்கி கணக்கில் உள்ள ரூ.206 கோடியை பயன்படுத்த விஜயபாஸ்கர் மனு: வருமான வரித்துறை பதில்தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வருமான வரி பாக்கிக்காக  வங்கிக் கணக்கை முடக்கிய வருமானவரி துறை மேற்கொண்ட நடவடிக்கையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். ஆர்.கே., நகர் தொகுதி இடைத்தேர்தல் கடந்த 2017ம் ஆண்டு நடந்தபோது,  வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக வந்த புகாரை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் 2011-12 ம் ஆண்டு முதல் 2018-19ம் ஆண்டு வரைக்குமான காலத்துக்கு 206 கோடியே 42 லட்சம் ரூபாய் வருமான வரி பாக்கி தரவில்லை என்று தெரியவந்தது.

இதையடுத்து அந்த வரியை வசூலிக்கும் வகையில், புதுக்கோட்டையில் உள்ள விஜயபாஸ்கரின் நிலங்களை முடக்கியும், மூன்று வங்கிக் கணக்குகளை முடக்கியும் வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது. இதை எதிர்த்து  விஜயபாஸ்கர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், இந்த வங்கி கணக்குகளில்தான் தனது எம்எல்ஏவுக்கான சம்பளத்தையும், அரசு நிதிகளை பெறுகிறேன். அந்த கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளதால், தன்னால் தொகுதிக்கு செய்ய வேண்டிய செலவுகளை செய்ய முடியவில்லை. அதனால், வங்கி கணக்கை முடக்கம் செய்த வருமானவரி துறை நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்  என்று கோரியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், மனுவுக்கு நாளை பதில் அளிக்கும்படி வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

Related Stories: