மாற்றுத்திறனாளி பலாத்காரம்: வாலிபருக்கு ஆயுள் தண்டனை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே ஒடுகம்பட்டியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார்(19). இவர், 18 வயதுடைய மாற்றத்திறனாளி பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த பெண் கர்ப்பிணியானார். பின்னர் அந்தப் பெண்ணை தினேஷ்குமார் திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இந்நிலையில், மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு, பெண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து இளம்பெண் அளித்த புகாரின் பேரில் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தினேஷ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் புதுக்கோட்டை மகளிர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சத்யா நேற்று தீர்ப்பளித்தார். அதில், பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தமிழக அரசு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டுமெனவும் அவர் உத்தரவிட்டார். இதையடுத்து தினேஷ்குமார் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: