ஒட்டன்சத்திரம் பகுதியில் தென்னை, வாழையை சூறையாடிய யானைகள்

பழநி: ஒட்டன்சத்திரம் பகுதியில் யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து தென்னை, வாழை, சோள பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. யானைகளினால் ஏற்படும் தொடர் இழப்புகளால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். ஒட்டன்சத்திரம் வனச்சரகத்தில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. இப்பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள மலைக்கிராமங்களுக்கு புகுந்து விடும் யானைக்கூட்டம் அங்குள்ள விவசாய பயிர்களை நாசம் செய்தும், விவசாயிகளை தாக்கியும் அட்டகாசம் செய்து வருகின்றன.

யானைகள் அட்டகாசத்தை தடுக்க அகழி அமைத்தல், சோலார் மின்வேலி அமைத்தல் போன்ற பல்வேறு முயற்சிகளை வனத்துறையினர் மேற்கொண்டும் உரிய பலனில்லை. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒட்டன்சத்திரம் வனச்சரகத்திற்குட்பட்ட கோம்பைபட்டி பகுதியில் காட்டு யானைகள் புகுந்து விவசாய நிலங்களில் உள்ள தென்னை, மா, மக்காச்சோளம் போன்ற பயிர்களை நாசம் செய்தன. இந்நிலையில் நேற்று ஒட்டன்சத்திரம் வனச்சரகத்திற்குட்பட்ட சிந்தலவாடம்பட்டி, ராமபட்டிணம்புதூர் மலைக்கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்தன.

இதில் வல்லரசு என்பவரது தோட்டத்திற்குள் 4 யானைகள் கொண்ட கூட்டம் நுழைந்து முருங்கை, தென்னை, சோளம், வாழை பயிர்களை சேதப்படுத்தின. இதில் சுமார் 35 வாழை கன்றுகளும், 10 தென்னை மரங்களும் சேதமடைந்துள்ளதாக வல்லரசு தெரிவித்துள்ளார். யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் மாலை நேரங்களில் கூட விவசாய தோட்டங்களில் வசிப்பவர்கள் வெளியில் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வனத்துறையினர் தீவிர ரோந்துப்பணி மேற்கொண்டு காட்டு யானைகள் விளைநிலங்களுக்குள் நுழையாமல் தடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: