மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தாலும் வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும் அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

சென்னை: மின் இணைப்பு வைத்துள்ள வாடிக்கையாளர்கள், அதனுடன் ஆதாரை இணைத்தாலும் வீடுகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரம் திட்டம் தொடரும். ஒருவர் 5 மின் இணைப்புகள் வைத்து இருந்தாலும் அவருக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவது நிறுத்தப்படாது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்கும் சிறப்பு முகாம், நவ.28ம் தேதி முதல் டிச.31ம் தேதி வரை காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் மூலம்,  மின்வாரிய அலுவலகங்களில் உள்ள சிறப்பு கவுன்டர்கள் மூலமாக பொதுமக்கள் தங்களின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைத்துக்கொள்ளலாம். மேலும், அனைத்து நாட்களிலும் இந்த முகாம்கள் செயல்படும். இந்நிலையில், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள மின் கட்டண வசூல் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமினை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் பார்வையிட்டார். மேலும், ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்கும் பணியினையும் அவர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மின்சாரத்துறை இயக்குநர் சிவலிங்கராஜன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இதன் பின்னர், நிருபர்களிடம் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியிருப்பதாவது: மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக விரிவான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என முதல்வரின் உத்தரவுபடி, மின்சார வாரியத்தின் 2,811 பிரிவு அலுவலகங்களில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் டிசம்பர் 31ம் தேதி வரை சிறப்பு முகாமை பயன்படுத்தி, மின் இணைப்புடன், ஆதார் எண்ணை பொதுமக்கள் இணைக்கலாம். இதனிடையே, பத்திரிகை மற்றும் ஊடகங்கள் வாயிலாக சில மாறுபட்ட கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அரசு வழங்கும் 100 யூனிட் இலவச மின்சாரமாக இருந்தாலும் சரி கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரமாக இருந்தாலும் சரி, விவசாய மின் இணைப்பாக இருந்தாலும் சரி ஏற்கனவே, அரசு நடைமுறையில் என்னென்ன திட்டங்கள் இருக்கிறதோ, இலவச மின் திட்டங்கள் மற்றும் அரசு வழங்கக்கூடிய மானியங்கள் அனைத்து நடைமுறைகளும் தொடர்ந்து பின்பற்றப்படும். மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கின்ற பொழுது அரசு வழங்கும் இலவச மின் திட்டங்கள், அரசு வழங்கக்கூடிய மானியங்கள் ரத்தாகிவிடும் என்ற உண்மைக்கு மாறான தவறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. எனவே, இலவச மின்சாரம் உள்ளிட்ட அரசு மானியம் வழங்கக்கூடிய அனைத்து திட்டங்களும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும்.

தற்போது, 2.33 கோடி வீட்டு மின் இணைப்புகளில் 1.15 கோடி மின் இணைப்புதாரர்களுக்கான தரவுகள் மட்டுமே மின்சார வாரியத்தில் உள்ளது. தற்போது தமிழகத்தில் சொந்த வீட்டில்  குடியிருப்போர், வாடகை வீட்டில் குடியிருப்போர், ஒருவர் பெயரில் எத்தனை  மின் இணைப்பு இருக்கிறது போன்ற எந்த புள்ளிவிவரமும் மின்வாரியத்தில் இல்லை. ஆதார் இணைப்பின் மூலம் தரவுகள் எளிதாக கிடைக்கும். மேலும், எவ்வளவு மின் உற்பத்தியாகிறது, கொள்முதல் எவ்வளவு, கணக்கீடு எவ்வளவு மற்றும் மின்துறையின் இழப்பீடுகளை எளிதில் கணக்கிடலாம். மின்வாரியம் சார்பில் கடந்த ஆண்டும் 15 ஆயிரத்து 516 கோடி வரை வட்டி கட்டியுள்ளோம். ஆதார் இணைப்பால் நஷ்டத்தை குறைக்கலாம். மேலும், ஒருவர் எத்தனை மின் இணைப்புகள் வைத்திருந்தாலும் சரி அவர்களுக்கு ஏற்கனவே வழங்கக்கூடிய 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். ஆதார் இணைப்பின் மூலமாக இந்த மாதம் அல்லது அடுத்த மாதம் மின் கட்டணம் செலுத்துவதில் எந்தவித பாதிப்பும் இருக்காது. ஒருவேளை மின் இணைப்பு வைத்திருந்தவர்கள் இறந்து இருந்தால், அவர்களின் பெயரில் உள்ள மின் இணைப்பை உரிய ஆவணங்கள் மூலம் பெயர் மாற்றம் செய்துக்கொள்ளலாம்.

பொதுமக்கள் ஆதார் எண்ணுடன் இணைத்துள்ள கைப்பேசி எண்ணை கையோடு கொண்டு வரும்பட்சத்தில் அந்த எண்ணில் வரும் ஓ.டி.பி எண்ணை உடனடியாக தெரிவித்து பணியினை விரைவாக முடித்துக் கொள்ளலாம். மேலும் பொதுமக்கள் மின் கட்டணத்தை செலுத்துவதற்கு தனிக் கவுண்டர்களும், கூடுதல் வசதியாக ஆதார் எண்ணை இணைப்பதற்கு தனிக் கவுன்டர்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆதார் எண்ணை இணைக்க பலர் ஆர்வம் காட்டுவதால் ஆன்லைனில் இணைப்பவர்களுக்கு (சர்வர் டவுன்) தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படுவதாக தகவல் வந்துள்ளன. அதனை நிவர்த்தி செய்யும் வகையில் அந்த பிரச்சனைகள் சரி செய்யப்படும் என்றார்.

Related Stories: