குன்னூர் எடப்பள்ளி பகுதியில் ரூ.2 கோடியில் வேளாண் சந்தை-கட்டுமான பணிகள் தீவிரம்

ஊட்டி :  நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே எடப்பள்ளி பகுதியில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வேளாண் சந்தை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த இரு மாதங்களில் பணிகள் முழுமையாக நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் காலத்தில் கேரட், உருளைகிழங்கு, பீன்ஸ், பீட்ரூட், முட்டைகோஸ் போன்ற இங்கிலீஸ் காய்கறிகள் எனப்படும் மலை காய்கறிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

அதன் பின் தற்போதும் தேயிலைக்கு அடுத்தப்படியாக பிரதான தொழிலாகவும், பொருளாதாரத்தை நிர்ணயிக்கக்கூடிய ஒரு அங்கமாகவும் காய்கறி விவசாயம் விளங்கி வருகிறது. மலை காய்கறிகள் சுமார் 7 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. நீலகிரியில் விளைவிக்கப்படும் கேரட், உருளைகிழங்கு உள்ளிட்ட மலை காய்கறிகள் அறுவடை செய்யப்பட்டு மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள மண்டிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு ஏலம் விடப்பட்டு தமிழகத்தின் சென்னை, கோவை, திருநெல்வேலி என மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

 இதுதவிர அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகாவின் பெங்களூர் போன்ற நகரங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. நீலகிரியில் இருந்து காய்கறிகளை அறுவடை செய்து சுமார் 40 கிமீ தொலைவில் உள்ள மேட்டுப்பாளையத்திற்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. லாரி வாடகை விவசாயிகளே தர வேண்டியுள்ளது.

மேலும் அவ்வாறு கொண்டு செல்லப்படும் காய்கறிகளுக்கு போதிய விலை கிடைக்காத பட்சத்தில் விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பதிலும் சிரமம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு மற்ற ஊர்களில் இருந்து விவசாயிகள் நீலகிரிக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்ல வசதியாக சந்தை அமைக்க வேண்டும் என பல்வேறு விவசாயிகளும் வலியுறுத்தி வந்தனர். இது குறித்து தோட்டக்கலைத்துறை வேளாண் வணிகத்துறை மூலம் அரசுக்கு அறிக்கையும் அனுப்பப்பட்டது.

 இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள எடப்பள்ளி பகுதியில் ரூ.2 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த வேளாண் சந்தை (மண்டி) அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதன் அடிப்படையில் எடப்பள்ளி பகுதியில் வருவாய்த்துறைக்கு சொந்தமான 6.5 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. பின்னர் அந்த இடம் வேளாண் வணிகத்துறைக்கு பரிமாற்றம் செய்யப்பட்டன.

இப்பணிகள் நிறைவடைந்த நிலையில், உடனடியாக சந்தை அமைக்கும் பணி துவங்கின. தற்போது 5 கடைகள், ஒரு ஏல மையம் கட்டுமான பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. அடுத்த இரு மாதங்களுக்குள் இப்பணிகள் முழுமையாக முடிவடைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். காய்கறிகளை பாதுகாப்பாக வைக்க குடோன், குளிர்பதனகிடங்கு, லாரிகள் நிறுத்துவதற்கு உண்டான வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தபட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 இது குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘குன்னூர் அருகே எடப்பள்ளி அருகே ஒருங்கிணைந்த சந்தை அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு இறுதியில் துவக்கப்பட்டது. தற்போது 5 கடைகள் மற்றும் ஏல மையம், லாரிகள் நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதிகள் ஆகியவற்றின் கட்டுமான பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்த சந்தை பயன்பாட்டிற்கு வந்தால், நீலகிரி காய்கறி விவசாயிகள் தங்களின் விளை பொருட்களை சமவெளி பகுதிக்கு கொண்டு செல்வதை தவிர்த்து இங்கேயே சந்தைப்படுத்த முடியும்.

சமவெளி பகுதிகளில் இருந்து வியாபாரிகள் இங்கு வந்து காய்கறிகளை மொத்தமாக கொள்முதல் செய்து செல்வார்கள். இதன் மூலம் விவசாயிகளுக்கு ஏற்படக்கூடிய போக்குவரத்து செலவுகள் குறையும். மேலும் கூடுதலாக குளிர்பதன கிடங்கு உள்ளிட்ட கூடுதல் வசதிகள் ஏற்படுத்த அரசிடம் நிதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது’’ என்றனர்.

Related Stories: