சொந்த ஊரில் வசதியாக வாழ நகைக்கடையில் கொள்ளை: சிறுவர்கள் 3 பேர் வாக்குமூலம்

சென்னை: சொந்த ஊரில் வசதியாக வாழ வேண்டும் என்பதற்காகவும், குடும்பத்துடன் செட்டில் ஆக வேண்டும் என்பதற்காகவும் நகைக்கடையில் கொள்ளையடித்தோம் என்று கைதான 3 சிறுவர்கள் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர். தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையில் கவுரிவாக்கம் பகுதியில் ப்ளூ ஸ்டோன் என்ற தங்கம் மற்றும் வைர நகைகள் விற்பனை செய்யும் நகைக் கடை உள்ளது. கீழ்தளம், முதல் தளம், இரண்டாம் தளம் என கொண்டுள்ள இந்த நகை கடையில் கடந்த 25ம் தேதி இரவு வழக்கம் போல வியாபாரம் முடிந்த பின்னர் கடையை பூட்டிவிட்டு ஊழியர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் 26ம் தேதி அதிகாலை சுமார் 4.30 மணியளவில் கடையில் இருந்த 1.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளைபோனது. கொள்ளையர்களை பிடிக்க, தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், மேலும் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. சென்னை மற்றும் புறநகர் முழுவதும் உஷார்படுத்தப்பட்டது. மேலும், சிசிடிவியில் நகை கொள்ளையடித்தவர்களின் அங்க அடையாளங்களை வைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.  அப்போது அங்கிருந்து டீக்கடைக்காரர் ஒருவர், கண்காணிப்பு கேமரா காட்சியில் பதிவாகி இருக்கும் நபர் செம்பாக்கம், சிவகாமி நகர், திருவள்ளூர் தெருவை சேர்ந்த வடமாநிலத்தை சேர்ந்தவர். இப்போதுதான் இங்கு டீ குடித்துவிட்டு சென்றார் என கூறியுள்ளார்.

சிறிது நேரத்தில் உடைகளை மாற்றியபடி அங்கு வந்த வாலிபரை கண்ட டீக்கடைக்காரர், இதுபற்றி போலீசாரிடம் தெரிவித்ததை அடுத்து போலீசார் அந்த நபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் எனவும், அவரது சகோதரர்களுடன் அறை எடுத்து தங்கி இருப்பதும் தெரியவந்தது. அவனை வைத்து அவனது 2 சகோதரர்களையும், வீட்டின் மேல் தளத்தில் பதுக்கி வைத்திருந்த நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதில், தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையில், கவுரிவாக்கம் பகுதியில் உள்ள ரோஸ் மில்க் ராஜா என்ற கடையில் வேலை செய்து வருவதாகவும், மூன்று பேரும் அவர்களது சொந்த ஊரான அசாம் மாநிலத்தில் வசதியாக வாழ வேண்டும் என்பதற்காக கடந்த இரண்டு மாதங்களாக திட்டம் தீட்டி, பின்னர் ஒருவர் மட்டும் கடையின் பின்புறம் உள்ள பைப்லைன் மூலம் இரண்டாம் தளத்திற்கு ஏறி, பின்னர் லிப்ட் இருக்கும் பகுதி வழியாக கடையின் உள்ளே இறங்கி நகைகளை கொள்ளையடித்ததுள்ளார்.

கொள்ளை சம்பவத்தில் போலீசாரின் நடவடிக்கையை கண்காணிக்க மீண்டும் கொள்ளை நடைபெற்ற நகைக்கடை அருகே வந்தபோது போலீசில் பிடிபட்டது விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் துரிதமாக செயல்பட்டு 2 மணி நேரத்தில் கொள்ளையர்களை பிடித்த போலீசாருக்கு தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் பாராட்டு தெரிவித்தார்.

சீர்திருத்த பள்ளியில் அடைப்பு

போலீசார் கூறியதாவது: கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவன் சம்பவம் நடைபெற்ற அன்று நள்ளிரவு மது அருந்தி உள்ளான். அப்போது சகோதரர்களில் ஒருவரை மது அருந்த வற்புறுத்தி உள்ளான். ஆனால் அவன் மது அருந்தவில்லை. பின்னர் அங்கிருந்து சென்ற சிறுவன், நகைக்கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு தப்பியுள்ளான். தமிழகத்தில் எங்கும் பழைய புகார்கள் எதுவும் இல்லை. எனவே இந்த திருட்டின் மூலம் தான் அவர்கள் தங்களது முதல் திருட்டை துவக்கியுள்ளனர். அசாம் மாநிலத்தில் இவர்கள் மீது வழக்குகள் ஏதாவது உள்ளதா என்பது குறித்து  விசாரணை நடந்து வருகிறது. கைது செய்யப்பட்ட மூன்று சிறுவர்களும் தற்போது செங்கல்பட்டு பகுதியில் உள்ள சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Related Stories: