தண்டையார்பேட்டையில் மாநகராட்சி இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட விநாயகர் கோயில் இடிப்பு: உச்ச நீதிமன்ற தீர்ப்பால் அதிகாரிகள் அதிரடி

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டையில் மாநகராட்சி இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த விநாயகர் கோயிலை இடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோயில் நேற்று இடிக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை தண்டையார்பேட்டை சுந்தரம் பிள்ளை நகர் பகுதியில் ஸ்ரீசுந்தர விநாயகர் கோயில் கடந்த 20 ஆண்டுகளாக உள்ளது. இந்த கோயிலில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர். கடந்த 2015ம் ஆண்டு கும்பாபிஷேகம் மிக சிறப்பாக நடந்தன. சுந்தரம் பிள்ளை நகர் குடியிருப்போர் சங்கத்தில் பல ஆண்டுகளாக  செயலாளராக பதவி வகித்து வந்த முத்து என்பவருக்கும், கோயில் நிர்வாகத்திற்கும் மோதல் ஏற்பட்டது.

இதன் காரணமாக, கடந்த 2018ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் சுந்தரம் பிள்ளை நகர் பகுதியில் உள்ள சுந்தர விநாயகர் கோயில் சாலை ஓரத்தில் 319 சதுர அடி மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பதாக அவர் வழக்கு தொடர்ந்தார். அதன்படி, கடந்த 2021ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் கோயிலை இடிக்க உத்தரவு பிறப்பித்தது. சுந்தரம் பிள்ளை நகர் குடியிருப்போர் சங்கம் மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2020ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில்  உயர் நீதிமன்றத்தின் உத்தரவு சரிதான் என்று தீர்ப்பு வழக்கியது.

மேலும் வரும் 30ம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றி உரிய ஆவணத்தை தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. அதன்படி, நேற்று காலை மாநகராட்சி மண்டல அதிகாரி மதிவாணன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தலைமையில் காவல் துணை ஆணையர் ஆரோக்கியம் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் இந்த பகுதியில் குவிக்கப்பட்டு அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோயிலை இடிப்பதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கோயில் முன்பு நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் கோயில் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், சமரசம் ஏற்பட்டது. மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி செயல்படுவதாக போலீசார் கூறினர். இதை தொடர்ந்து, கோயிலை இடிக்கும் பணி நடந்தது. ஒவ்வொரு பகுதிகளாக இடித்து விநாயகர் சிலை, சாய்பாபா சிலை, பெருமாள் சிலை, தக்ஷிணாமூர்த்தி சிலை ஐயப்பன் சிலைகள் அகற்றப்பட்டன. மேலும் மேற்கூரை, கட்டிடம் அனைத்தையும் மாநகராட்சி ஊழியர்கள் இடித்தனர். இதற்காக, பொக்லைன் இயந்திரம், லாரி, மினி ஜேசிபி, புல்டோசர் இயந்திரங்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டன. பொதுமக்கள் போராட்டம் நடத்தினால் கைது செய்வதற்காக தயார் நிலையில் மாநகர பேருந்து நிறுத்தப்பட்டு இருந்தது. ஆக்கிரமிப்பு கோயில் இடிக்கப்பட்டதால் தண்டையார்பேட்டை சுந்தரம் பிள்ளை நகர் பகுதியில் சுமார் 4 மணி நேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories: