நாடு வளர்ந்த தேசமாக உருவெடுக்க கடமையை செய்வதற்கே முன்னுரிமை: பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: ‘நாடு வளர்ந்த தேசமாக உருவெடுக்க, நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் அவரவர் அடிப்படை கடமைகளை, பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும்’ என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். அரசியலமைப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் முறைப்படி ஏற்றுக் கொள்ளப்பட்ட நவம்பர் 26ம் தேதி, கடந்த 2015ம் ஆண்டு முதல் அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, உச்ச நீதிமன்றத்தில் நேற்று நடந்த அரசியலமைப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது: இன்று ஒட்டுமொத்த உலகின் பார்வையும் இந்தியா மீது உள்ளது. இந்தியாவின் வளர்ச்சியையும், அதன் விரைவான பொருளாதார வளர்ச்சியையும் கண்டு உலகம் நம்மை உற்று நோக்குகிறது. இந்த சமயத்தில் ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை அடுத்த வாரம் நாம் ஏற்க உள்ளோம்.

நமது பங்களிப்பை உலகிற்கு வழங்க இது ஒரு பெரிய வாய்ப்பு. ஒன்றுபட்ட இந்திய அணியாக நாம், உலக அரங்கில் நாட்டின் மதிப்பை உயர்த்துவதற்கும், நம் பங்களிப்பை உலகிற்கு வழங்குவதற்கும் உழைக்க வேண்டும். இது நமது கூட்டு பொறுப்பு. ஜனநாயகத்தின் தாயாக இருக்கும் நம் நாடு அதன் பண்டைய கொள்கைகளையும், அரசியலமைப்பின் உணர்வையும் வலுப்படுத்துகிறது. ஏழைகள், பெண்களுக்கு அதிகாரம் அளித்து வருகிறது. இந்தியா தற்போது முழு பலத்துடன் முன்னேறி, அதன் பன்முகத்தன்மையில் பெருமை கொள்கிறது. குடிமக்கள் அவரவர் கடமைகளை அர்ப்பணிப்புடன், நேர்மையுடன் நிறைவேற்ற வேண்டியதும் அடிப்படை உரிமைகளாகும் என்பது மகாத்மா காந்தியின் கூற்று.  

அந்த வகையில், நாட்டை வளர்ந்த தேசமாக மாற்றக்கூடிய அடுத்த 25 ஆண்டு கால அமிர்த காலத்தில் அடிப்படை கடமைகளை நிறைவேற்று சகாப்தமாக இருக்க வேண்டும். சாமானிய மக்களாக இருந்தாலும் சரி, நிறுவனங்களாக இருந்தாலும் சரி, நமது பொறுப்புகள், கடமையை நிறைவேற்றுவதே அனைவரின் முன்னுரிமையாக இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் அவரவர் அடிப்படை கடமையை செவ்வனே நிறைவேற்றினால், நாடு புதிய உயரங்களை அடைய முடியும். இளைஞர்கள் இடையே அரசியலமைப்பு பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். விழாவில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: