நெல்லை மாநகராட்சியில் சட்டத்திற்கு புறம்பாக குடிநீர் உறிஞ்சிய 140 மின்மோட்டார்கள் பறிமுதல்-பொது ஏலம் விடுவதற்கு நடவடிக்கை

நெல்லை : நெல்லை மாநகர பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக குடிநீர் உறிஞ்சிய 140 மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இனிவரும் காலங்களில் பிடிக்கப்பட்ட மின்மோட்டார்கள் பொது ஏலத்திற்கு விடப்படும் என மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி எச்சரித்துள்ளார்.நெல்லை மாநகர பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக வீட்டு குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டார்களை ெபாருத்தி தண்ணீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி எச்சரித்திருந்தார். இந்நிலையில் இதற்காக தனிக்குழு அமைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இக்குழுவினர் தச்சை மண்டலத்தில் வார்டு எண்கள் 1,2 மற்றும் 12, 13க்கு உட்பட்ட சிதம்பர நகர், நல்மேய்ப்பர் நகர், செல்வவிக்னேஷ் நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 73 மின்மோட்டார்களும், பாளை மண்டலத்தில் வார்டு எண் 37, 38க்கு உட்பட்ட போத்திஸ் நகர், ஐஸ்வர்யா நகர், கேடிசி நகர், அய்யா சுப்பிரமணி நகர், கோஆப்டெக்ஸ் காலனி ஆகிய பகுதிகளில் சுமார் 67 மின் மோட்டார்களும் சேர்த்து மொத்தம் 140 மின்மோட்டார்கள் இதுவரை பிடிப்பட்டுள்ளன.

மாநகராட்சி மைய அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள 140 மின்மோட்டார்களை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி பார்வையிட்டு கூறுகையில், ‘‘நெல்லை மாநகராட்சியில் சுமார் 5 லட்சத்து 33 ஆயிரம் மக்கள் தொகையும், ஒரு லட்சத்து 82 ஆயிரம் குடியிருப்புகளும் உள்ளன. 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு குடிநீர் குழாய் இணைப்புகள் உள்ளன. அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் மாநகராட்சி சார்பில் நடந்து வருகின்றன. இந்நிலையில் மின்மோட்டார்களை பொருத்தி சட்டத்திற்கு விரோதமாக குடிநீரை உறிஞ்சி எடுப்பதால், குழாய் இணைப்புகளில் நீர் கசிவு ஏற்பட்டு வருகிறது. மேலும் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதுடன், குடிநீர் சீராக கொண்டு செல்வதிலும் சிரமங்கள் ஏற்படுகின்றன.

எனவே பொதுமக்கள் அவர்களாகவே முன்வந்து சட்டத்திற்கு புறம்பாக வைக்கப்பட்டுள்ள மின்மோட்டார்களை அகற்றிட வேண்டும். தவறும் பட்சத்தில் அதற்கென அமைக்கப்பட்ட சிறப்புக் குழு கண்டறிந்தால், மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், அபராதம் விதிக்கப்படும். இனிவரும் காலங்களில் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படுவதுடன், பிடிக்கப்பட்ட மின்மோட்டார்கள் பொது ஏலத்திற்கு விடப்படும். வீடுகள் மட்டுமல்லாது தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்களிலும் சட்டத்திற்கு புறம்பாக மின்மோட்டார் வைத்து குடிநீர் எடுக்கப்படுவது கண்டறியப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மாநகராட்சி சார்பில் உதவி செயற்பொறியாளர்கள் லெனின், ராமசாமி, இளநிலை பொறியாளர்கள் ஜெயகணபதி, தன்ராஜ், அருள் கார்த்திக், தமிழ்செல்வம், அருணாச்சலம், சொர்ணவேல், வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய சிறப்பு குழுவானது மாநகர் முழுவதும் தொடர்ச்சியாக இத்தகைய ஆய்வுகளை மேற்கொள்வர்.’’ என்றார்.

Related Stories: