நடிகர் சூரி அளித்த புகார் முன்னாள் டிஜிபி மீதான வழக்கில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை: நடிகர் சூரி புகாரின் பேரில் முன்னாள் டிஜிபி மீது பதிவான வழக்கின் புலன் விசாரணை நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று போலீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அடுத்த சிறுசேரியில் நிலம் வாங்கி தந்து மோசடி செய்ததாக ஓய்வு பெற்ற டிஜிபி ரமேஷ் குடவாலா, திரைப்பட தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் உள்ளிட்டோர் மீது போலீசில் நகைச்சுவை நடிகர் சூரி புகார் செய்தார். இந்த புகாரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அன்புவேல் ராஜன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் நவநீதகிருஷ்ணன் ஆஜராகி, சூரி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் முதலில் வழக்குப்பதிவு செய்யவில்லை. இதையடுத்து, வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட கோரி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சூரி தரப்பில் அவரது உதவியாளர்தான் குற்றவியல் விசாரணை முறை சட்டப்பிரிவு 156(3)ன் மனு தாக்கல் செய்துள்ளார். அதன்படி பதிவான இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார். இதையடுத்து, சூரி கொடுத்த புகாரின் அடிப்படையில் பதிவான வழக்கின் புலன் விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை டிசம்பர் 2ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories: