‘நம்ம ஊரு சூப்பரு’ விழிப்புணர்வு பேனர் விவகாரம்: இபிஎஸ் ஆட்சியின்போது எதை எடுத்தாலும் 10 மடங்கு உயர்த்தி கணக்கு காட்டினர்; அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி

சென்னை: ‘நம்ம ஊரு சூப்பரு’ விழிப்புணர்வு பேனர் அச்சடித்ததில் குற்றம்சாட்டியுள்ள, எடப்பாடி ஆட்சியின் போது தான் எதை எடுத்தாலும் 10 மடங்கு உயர்த்தி கணக்கு காட்டப்பட்டது என ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார். இதுகுறித்து. சென்னை தலைமை செயலகத்தில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஊரக வளர்ச்சி துறையின் மூலம் செயல்படுத்தி வரும் ‘நம்ம ஊரு சூப்பரு’ இயக்கத்தின் விழிப்புணர்வு பதாகைகள், அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டதாக  உண்மைக்கு மாறான செய்திகள் வருகிறது. ஊரக பகுதிகளில் ஆக.15 முதல் அக்.2ம் தேதி வரை ‘நம்ம ஊரு சூப்பரு’ இயக்கம் அனைத்து கிராம பகுதிகளிலும் கிராம சபை கூட்டத்தின் போது தொடங்கப்பட்டது.

நம்ம ஊரு சூப்பரு இயக்கத்தின் செலவினங்கள், ஒன்றிய நிதி குழு மானியம் அனுமதித்துள்ள 2% நிதியுடன், நிர்வாக செலவு நிதி தொகுப்பில் இருந்தோ அல்லது பொது நிதியில் இருந்து மேற்கொள்ளவோ ஊரக வளர்ச்சி துறை ஆணையரால் அறிவுறுத்தப்பட்டது. விளம்பர பதாகைகள் நிறுவியது குறித்து, மாவட்டங்களில் பெறப்பட்ட விவரங்களின்படி அச்சடிக்கும் பணிகள் என்பது எந்த ஒரு தனிநபர் நிறுவனமும் ஈடுபடுத்தப்படவில்லை. மாநிலம் முழுவதும் உள்ள 89 நிறுவனங்கள் மூலம், 27 மாவட்டங்களில் இந்த விளம்பர பதாகைகள் அச்சடிக்கப்பட்டுள்ளன.

9 மாவட்டங்களில் ஊராட்சிகளின் வாயிலாக அந்த பகுதிகளில் உள்ள அச்சகங்களில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொத்தம் 84,653 பதாகைகள் பல்வேறு அளவுகளில் அச்சடிக்கப்பட்டுள்ளன. ஒரே ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன என்று கூறுவது உண்மைக்கு புறம்பான தகவல் ஆகும். இவற்றிற்கான சராசரி மதிப்பீடாக  பேனர் ஒன்றுக்கு சுமார் ரூ.611 சரக்கு மற்றும் சேவை வரி உட்பட செலவிடப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் புகாரில் பேனர் ஒன்றுக்கு சுமார் ரூ.7,906 செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது முற்றிலும் தவறானதாகும்.

ஒரு அரசின் மீது முதல்வராக இருந்தவர், எதிர்கட்சி தலைவராக இருக்கக்கூடியவர் இதுபோன்ற உண்மைக்கு புறம்பான கருத்துகளை கூறுகின்ற நேரத்தில் துறையின் அமைச்சர் என்ற முறையில் நானும் சில விளக்கங்களை கூற கடமைப்பட்டுள்ளேன். நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும், சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலாக இருந்தாலும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும். இதைதான் நமது அரசியல் சாசனம் கூறுகிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மாநில தேர்தல் ஆணையம் நடத்துகிறது. மாநில தேர்தல் ஆணையம் என்பது மாநில அரசின் நிர்வாகத்தில் இருக்கிறது.

ஆக, மாநில அரசின் பொறுப்பிலே இருந்த அதிமுகவினர் 31 ஆண்டு காலம் நாங்கள் தமிழகத்தை ஆண்ட கட்சி என்று பறைசாற்றி கொள்கிறவர்கள், முறையாக இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தவில்லை என்பது எங்களின் குற்றச்சாட்டு. உள்ளாட்சி அமைப்புகளை முடக்கிய காரியத்தை செய்தவர்கள்தான் எடப்பாடி பழனிசாமியின் கடந்த கால ஆட்சி. முறையாக தேர்தல் நடத்தாத காரணத்தால் ஒன்றிய அரசு தர வேண்டிய  பல்வேறு நிதிகள் பெறமுடியாமல் போய், உள்ளாட்சி அமைப்புகளுக்கு, தமிழக வளர்ச்சிக்கு மிகப்பெரிய கேடுகளை விழைவித்த  ஆட்சிதான் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு என்பதை சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.

அதேபோல் உள்ளாட்சியில் முடிக்கப்பட்டுள்ள பணிகளை பற்றி விளம்பரம் செய்கிறார்கள் என சொல்கிறார்கள். அத்தகைய விளம்பரங்களை அவர்களின் ஆட்சி காலத்தில்தான் செய்து இருக்கிறார்கள். இப்போது நாங்கள் செய்யும் விளம்பரங்கள் என்பது மக்களிடத்தில் விழிப்புணர்வை  ஏற்படுத்துவதற்காக, தூய்மை இயக்கத்தை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதற்காகவும், கிராமசபை கூட்டத்திற்காகவும் செய்யப்பட்டது. அவர்கள் காலத்தில் தான் பேனர் வைப்பத்தில் ஊழல் செய்து இருக்கிறார்கள்.  

அவர்கள் ஆட்சி காலத்தில் பேனர்களுக்கு போடப்பட்ட தொகை ரூ.28 ஆயிரம், எதை எடுத்தாலும் 10 மடங்கு உயர்த்திதான் அந்த காரியத்தை செய்தார்கள். அதேபோல் ரூ.500 விலை கொண்ட எல்.இ.டி விளக்கை ரூ.5 ஆயிரத்திற்கு  விலை போட்டவர்கள் அவர்கள். ரூ.4 ஆயிரம் விலை கொண்ட விளக்கை ரூ.15 ஆயிரத்திற்கு விலை போட்டவர்கள், இன்றைக்கு எங்கள் மீது போலியான குற்றச்சாட்டை சுமத்துகின்றனர். அரசின் முதன்மை செயலாளர் கொடுத்து இருக்கும்  விவரப்படி, ஒரு பேனருக்கான செலவு ரூ.611 தான், வரிகள் உள்பட மாநிலம்  முழுவதும் இருக்கக்கூடிய கணக்கீடுகளின் அடிப்படையில்  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் பேனருக்கு ரூ.7,906 செலவு செய்யப்பட்டுள்ளது  என்று சொல்வது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: