நீதிமன்றம் விளையாட்டு மைதானமா?.. கோகுல் ராஜ் கொலை வழக்கில் வரும் 30ம் தேதி சுவாதி மீண்டும் ஆஜராக ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் சுவாதியை புதன்கிழமை மீண்டும் ஆஜர்படுத்த உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ், வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்ததாக கூறி, கடந்த 2015-ம் ஆண்டு ஆணவ படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தங்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனைகளை நிறுத்தி வைக்க கோரி யுவராஜ் உள்ளிட்ட 10 பேர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர். கோகுல்ராஜின் தாய் சித்ரா மற்றும் சிபிசிஐடி தரப்பில் 5 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து அப்பீல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை நேற்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை; இந்த கொலை வழக்கின் முக்கிய சாட்சி பிறழ் சாட்சியாக மாறியது ஏன் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அந்த பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டிருந்தனர். இதனை தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுவாதி இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அந்தப் பெண்ணிடம் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் விசாரணை நடத்தினர். நடந்த சம்பவம் குறித்தும், முதலில் வாக்குமூலம் அளித்தது குறித்தும், பின்னர் பிறழ் சாட்சியாக மாறியது குறித்தும் அவரிடம் கேள்விகளை கேட்டனர். இந்த கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டன.

‘நான் அவள் இல்லை’

பெரும்பாலான கேள்விகளுக்கு இளம்பெண் ‘தெரியாது’ என்றே பதிலளித்தார். சம்பவம் நடந்த 23.05.2015 அன்று காலை நீங்கள் கோகுல்ராஜை பார்த்தீர்களா என்று நீதிபதிகள் அவரிடம் கேட்டனர். அதற்கு, ‘இல்லை. நான் அவரை பார்க்கவில்லை’ என்று அவர் பதில் அளித்தார். இதையடுத்து கோகுல்ராஜுடன் அவர் கோயிலுக்கு வந்தது, கோயிலை விட்டு வெளியே வந்தது உள்ளிட்ட காட்சிகளின் சிசிடிவி பதிவுகளை, அவருக்கு எல்இடி டிவியில் போட்டு காட்டி, அவரிடம் நீதிபதிகள் கேள்விகளை கேட்டனர். அப்போது ‘கோகுல்ராஜின் குடும்பம், பின்னணி குறித்து எனக்கு தெரியாது.

டிவியில் உள்ளது கோகுல்ராஜ்தான். ஆனால் அவருடன் செல்லும் பெண் நான் இல்லை’ என்று நீதிபதிகளிடம் அவர் மீண்டும், மீண்டும் கூறினார். இதையடுத்து நீதிபதிகள் அவரது முகம் தெளிவாக பதிவான குளோஸ் அப் காட்சிகளை போட்டு காட்டினர். அதை பார்த்ததும் அவர் கண்ணீர் விட்டு கதறினார். அவரிடம் நீதிபதிகள் கூறுகையில், ‘‘இது நீங்கள் இல்லையா? உங்களையே உங்களுக்கு அடையாளம் தெரியவில்லையா? இந்த வழக்கின் முக்கிய சாட்சி நீங்கள்தான். நீங்கள் உண்மைகளை கூற வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வளவு போலீஸ் பாதுகாப்புடன் இங்கு அழைத்து வரப்பட்டுள்ளீர்கள். உண்மைகளை கூறத் தவறினாலோ, பொய்யான தகவல்களை தெரிவித்தாலோ மீண்டும், மீண்டும் குறுக்கு விசாரணைக்காக இந்த நீதிமன்றத்திற்கு நீங்கள் வர வேண்டியது நேரிடும்’ என்று எச்சரிக்கை விடுத்தனர்.

இதன் பின்னர் சுவாதிக்கு நீதிபதிகள் கால அவகாசம் வழங்கினர். அப்போது தனக்கு மயக்கம் வருவதாக சுவாதி தெரிவித்தார். பின்னர் நீதிமன்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து உணவு இடைவேளைக்கு பின்பு மீண்டும் சுவாதி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீங்கள் பேசியதாக கூறப்படும் ஆடியோவை சோதனைக்கு அனுப்பியுள்ளோம். அதில் உண்மை தெரிந்துவிடும் என கோபத்துடன் நீதிபதிகள் தெரிவித்தனர். இதனை கேட்ட உடன் சாட்சி சொல்லும்போதே சுவாதி கண்ணீர் விட்டு கதறியதால் நீதிமன்றத்தில் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து சுவாதிக்கு நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பினர். நீதிமன்றம் விளையாட்டு மைதானமா?, சத்ய பிரமாணம் எடுத்தபின் பொய் சாட்சி கூறுவது ஏன்? வீடியோவில் உங்களையே பார்த்து தெரியாது என்கிறீர்கள்.

எவ்வளவு நாட்கள் உண்மையை மறைக்க முடியும்? குழந்தைகள் மீது சத்தியம் செய்து விட்டு, உங்களைப் பார்த்து நீங்களே தெரியாது என சொன்னால், இந்த நீதிமன்றம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? உண்மையைக் கூறுவதால், ஏதேனும் பிரச்சனை எழுமெனில் அவற்றையாது சொல்லுங்கள் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த சுவாதி எனக்கு தெரிந்ததை சொல்லிவிட்டேன் என கூறினார். கீழமை நீதிமன்றத்தைப் போல, இந்த நீதிமன்றம் எளிதாக கடந்து செல்லாது; உண்மையை மறைத்தால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவேண்டிய சூழல் வரும்.

உண்மை என்றைக்கானாலும் சுடும்  என தெரிவித்த நீதிபதி வழக்கு விசாரணை அடுத்தவாரம் புதன்கிழமைக்கு ஒத்திவைத்தார். மேலும் அன்றைய தினம் சுவாதி மீண்டும் ஆஜராக உத்தரவிட்டார். புதன்கிழமை ஆஜராகும் போது இதே நிலை நீடித்தால் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கபப்டும் என்றும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Related Stories: